திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், இதை தடுக்க 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளன. கோயிலுக்கு இந்து பக்தர்களும், தர்காவுக்கு இஸ்லாமியர்களும் சென்று வழிபட்டு வந்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு போராட்டத்தை முன்னெடுத்தன. இதற்கு, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் மாறி மாறி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்பட்டதால், திருப்பரங்குன்றம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், முருகனின் முதல்படை வீடான ‘திருப்பரங்குன்றம் மலையை காப்போம்’ என்ற கோரிக்கையுடன் இன்று (பிப்.4) இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அறப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும் போராட்டத்தை தடுக்க கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே, தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளதால், திருப்பரங்குன்றம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மலை உச்சியிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். நுழைவு வாயில், மக்கள் மேலே செல்ல வாய்ப்புள்ள மலைப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோரின் இருப்பிடம், வாகனங்கள், தங்குமிடங்களை காவல் துறையினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
இதுகுறித்து காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கூறுகையில், ‘மதுரையில் 144 தடை உத்தரவு ஆட்சியரால் பிறக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். இந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வரலாம். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். தடையை மீறும்பட்சத்தில், கைது உள்ளிட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதற்கிடையே முக்கிய நிர்வாகிகள் பலரை நேற்றிலிருந்தே வீட்டுச்சிறை மற்றும் கைது நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
144 தடை உத்தரவு: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் மலை குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதனால், அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, மதுரை மாவட்டம் மற்றும் மாநகருக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில், பிப்ரவரி 3ம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 4 நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.