ஸ்ரீநகர் எம்.பி. ஆகா ரூஹுல்லா மெஹ்தி கட்சியிலிருந்து விலகியதற்கு பாஜகதான் காரணம் என்று தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் தொகுதியின் தேசிய மாநாட்டு கட்சி எம்.பி.யான ஆகா ரூஹுல்லா மெஹ்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகியதுடன், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏ.க்கள் சலாம் சாகர், சஜத் ஷாஹீன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: ‘ஆபரேஷன் லோட்டஸ்’ திட்டத்தின் மூலம் பாஜக தனது நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது. மெஹ்தியின் விலகல் திட்டமிட்டு செய்யப்பட்ட உத்தி. அவரை தேசிய மாநாட்டு கட்சியிலிருந்து வெளியேற்றுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 80-90 ஆண்டுகளில் இரண்டு, மூன்று முறை நம்மை பலவீனப்படுத்த முயன்ற சக்தியுடன் அவர் (மெஹ்தி) இப்போது சேர்ந்துவிட்டார். அந்த முயற்சிகளை முன்பு நாங்கள் முறியடித்தோம். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்கும் போராட்டத்தை தேசிய மாநாட்டு கட்சி கைவிட்டுவிட்டது என்ற மெஹ்தியின் குற்றச்சாட்டு ஒரு சாக்குப்போக்கு. ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகளில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.














