பிஹார், கேரள மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
பிஹார், கேரளா, மணிப்பூர், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த வாரம் புதிய ஆளுநர்களை நியமித்தார்.
இதில் கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான் பிஹார் ஆளுநராகவும், பிஹார் ஆளுநராக இருந்த விஸ்வநாத் அர்லேகர் கேரள ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்விரு மாநிலங்களின் புதிய ஆளுநர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் பதவியேற்றார். இவருக்கு பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதுபோல் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் கேரள ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். இவருக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிதின் ஜாம்தார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.