ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தியது. இதையடுத்து பிளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக பெங்களூரு அணி நுழைந்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவிலுள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்த ஆட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக்கப் பெத்தேலும், விராட் கோலியும் களமிறங்கினர். அதிரடியாக விளையாட முயன்ற ஜேக்கப் பெத்தேல், ஹர்பிரீத் பிரார் பந்துவீச்சில் போல்டானார். அவர் 7 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இதையடுத்து விராட் கோலியுடன், தேவ்தத் படிக்கல் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினர். அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த தேவ்தத் படிக்கல் ஹர்பிரீத் பிரார் பந்துவீச்சில் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் குவித்தார். இதன் பின்னர் விராட் கோலியுடன் வெங்கடேஷ் ஐயர் இணைந்தார். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாட ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.
இந்நிலையில் அரை சதத்தைக் கடந்து விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி, சாஹல் பந்துவீச்சில் பிரியன்ஷ் ஆர்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் குவித்தார்.வெங்கடேஷ் ஐயர் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினார். 20-வது ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட் அவுட்டானார். அவர் 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடத் தொடங்கியது. பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே பிரியன்ஷ் ஆர்யாவை வெளியேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் புவனேஷ்வர் குமார். ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தார் ஆர்யா. அவரைத் தொடர்ந்து கூப்பர் கானொலி களத்துக்குள் புகுந்தார்.
ஆனால் 3-வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்பரன் சிங் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது அது பேட்டில் பட்டு தேவ்தத் படிக்கல்லிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஒரு ரன் எடுத்த நிலையில் ரஷிக் சலாம் தர் பந்தில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 19 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
கூப்பர் கானொலி 37, ஸ்டாய்னிஸ் 37, சஷாங்க் சிங் 56 பந்துகளில் 56, அஸ்மத்துல்லா ஓமர்சாய் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்பிரீத் பிரார் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. அந்த அணி 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் பஞ்சாப் அணிக்கு இது 6-வது தொடர் தோல்வியாக அமைந்தது. வெங்கடேஷ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
100 போட்டிகளுக்கு கேப்டன்
தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டம், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் ஸ்ரேயஸ் ஐயருக்கு கேப்டனாக 100-வது போட்டியாகும். ஸ்ரேயஸ் ஐயர் இதுவரை டெல்லி அணிக்கு 41 போட்டிகளுக்கும், கொல்கத்தா அணிக்கு 29 போட்டிகளுக்கும், பஞ்சாப் அணிக்கு 30 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.
தொடர்ச்சியாக 6-வது தோல்வி
ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அபாரமாக விளையாடிய பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்று தோல்வியே காணாத அணியாக இருந்தது. இதில் ஒரு ஆட்டம் மட்டும் மழையால் கைவிடப்பட்டது. ஆனால் 2-வது பாதியில் பஞ்சாப் அணி வரிசையாக தோல்விகளைப் பெற ஆரம்பித்தது. தற்போது அந்த அணி 13 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
அந்த அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே பாக்கியுள்ளது. லக்னோ அணியுடனான அந்த ஆட்டம் வரும் 23-ம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்றாலும் அந்த அணி மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே பிளே ஆஃப் சுற்றில் நுழையுமா, நுழையாதா என்பது தெரியும்.















