ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி தலா 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
அடுத்த 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே, அடுத்த 2 போட்டிகளுமே சிஎஸ்கே அணிக்கு வாழ்வா சாவா போட்டிகளாக அமைந்துள்ளன. எனவே, இந்த லீக் போட்டியில் வெற்றி பெறுவதற்கு சிஎஸ்கே அணி வீரர்கள் பெரு முயற்சி செய்வர் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் தோல்வி கண்டது. அதற்கு முந்தைய 3 ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்டிருந்தனர். ஆனால் லக்னோ உடனான போட்டியில் சிஎஸ்கே வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. மேலும் பேட்டிங்கின்போது முன்வரிசை வீரர்கள் யாருமே தங்களது உயர்மட்டத் திறனை வெளிப்படுத்தவில்லை.
சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் பட்டேல் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். எனவே, இன்றைய போட்டியில் இவர்கள் மட்டையை சுழற்றும்போது அது அணிக்கு வெற்றிவாய்ப்பைத் தேடித் தரும். அதுபோலவே கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர் ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பர் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல் பந்துவீச்சில் முகேஷ் சவுத்ரி, ஸ்பென்ஸர் ஜான்சன், அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது, குர்ஜப்நீத் சிங் ஆகியோர் ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். இன்றைய போட்டியில் அகீல் ஹொசைன் களமிறங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு வெற்றி கிட்டும்.
அதேநேரத்தில் ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்விகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. அடுத்த 2 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றால் தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும். எனவே, சிஎஸ்கே, பெங்களூரு ஆகிய 2 அணிகளுடனான கடைசி 2 லீக் போட்டிகளும் ஹைதராபாத் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வீரர்கள் தங்களது பலத்தை நிரூபிக்கக் காத்திருக்கின்றனர்.
ஹைதராபாத் அணி, குஜராத் உடனான தனது கடைசி லீக் ஆட்டத்தில் 86 ரன்களுக்குச் சுருண்டு மோசமான தோல்வியைப் பதிவு செய்திருந்தது. எனவே, இன்றைய ஆட்டத்தில் தனது பேட்டிங் பலத்தை வெளிப்படுத்தி தோல்வியிலிருந்து மீண்டு வர ஹைதராபாத் அணி காத்திருக்கிறது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மீண்டும் ஒரு முறை தங்களது உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல் பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், நிதிஷ்குமார் ரெட்டி, பிரஃபுல் ஹிங்கே, இஷான் மலிங்கா, சகிப் ஹுசைன், ஷிவங் குமார் ஆகியோர் சிஎஸ்கே வீரர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க காத்திருக்கின்றனர். மொத்தத்தில் இந்த லீக் ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியைப் போன்றதாக அமைந்துள்ளதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என்று நம்பலாம்.















