குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அதில் இரண்டு பைலட்கள் சென்றனர். விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானிகள் விமானத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.
ஒரு பைலட் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட் மூலம் தரையிறங்கினார். அவர் காயங்களுடன், குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு பைலட் ஆன சித்தார்த் யாதவ் என்பவரால் சரியான நேரத்தில் வெளியேற முடியவில்லை. அந்த போர் விமானம் ஜாம்நகர் அருகேயுள்ள வயலில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் சித்தார்த் யாதவ் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த சித்தார்த் யாதவ் உடல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) முழு ராணுவ மரியாதையுடன் ஹரியானா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள், இந்திய விமானப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அப்போது சித்தார்த்துக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட சானியா அவரது உடலை பார்த்து கதறி அழுதார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் “அவரது முகத்தை கடைசியாக பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறும் சானியா, சித்தார்த்தின் முகத்தை பார்த்ததும் “பேபி, நீங்கள் என்னை வந்து கூட்டிச் செல்லவில்லை. நீங்கள் எனக்கு சத்தியம் செய்திருந்தீர்கள்” என்று கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்கச் செய்வதாக அமைந்தது.
மேலும் சித்தார்த் – சானியாவின் நிச்சயதார்த்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.