ஆசிய யு-19 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் நேற்று அல் அமாரத் நகரில் இந்தியா யு-19 அணி, ஆப்கானிஸ்தான் யு-19 அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் யு-19 அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக நோமன் சலார்ஸாய், ஷா ஃபைசல் ரஹிமி ஆகியோர் தலா 51 ரன்கள் சேர்த்தனர். இந்தியா யு-19 அணி தரப்பில் இஷான் 3, ஆர்யன் சவ்ஷானி 2 விக்கெட்களை வீழ்த்தினர். 229 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா யு-19 அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான கேப்டன் லக்ஷயா ராய்ச்சந்தானி 90 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 93 ரன்களும், ஆர்யவீர் சேவக் 57 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், விகே வினீத் 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் விளாசினர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா யு-19 அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நாளை (13-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா யு-19, பாகிஸ்தான் யு-19 அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. பாகிஸ்தான் யு-19 அரை இறுதி ஆட்டத்தில் வங்கதேச யு-19 அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் 139 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் யு-19 அணி 21.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.














