முதல்வர் அரசு இல்லத்தை ரூ.100 கோடியில் அலங்கரித்த அர்விந்த் கேஜ்ரிவால்: ரூ.5.6 கோடி ஜன்னல் திரை; ரூ.15 கோடி சானிட்டரி பிட்டிங்ஸ்

0
37

புதுடெல்லி: டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி வகித்தபோது, அவர் வாழ்ந்த வீட்டை ரூ.100 கோடிசெலவில் அலங்கரித்து உள்ளார். ரூ.5.6 கோடிக்கு ஜன்னல் திரைகள், ரூ.15 கோடிக்கு குளியல் அறை, கழிவறை, சமையல் அறைக்கான பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2015 பிப்ரவரி முதல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதிவரை டெல்லி முதல்வராக பதவிவகித்தார். அப்போது டெல்லியின் சிவில்லைன்ஸ் பகுதி பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் அவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். இது 21,000 சதுர அடி கொண்ட வீடு ஆகும்.

இந்த வீட்டில் கேஜ்ரிவால் வசித்தபோது பல கோடி ரூபாய் செலவில் வீட்டை அலங்கரித்ததாக கடந்த ஆண்டு மே மாதம் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் டெல்லி பொதுப்பணித் துறை டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகள், அதற்கான செலவுகள் குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இதன்படி டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் பதவி வகித்தபோது, முதல்வரின் இல்லம் ரூ.100 கோடி செலவில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக டெல்லி முதல்வரின் இல்லத்துக்காக ரூ.5.6 கோடி செலவில் 80 ஜன்னல் திரைகள் வாங்கப்பட்டு உள்ளன. சமையல் அறை, குளியல் அறை,கழிவறைக்காக ரூ.15 கோடிமதிப்பில் சானிட்டரி பிட்டிங்ஸ் வாங்கி பொருத்தப்பட்டு உள்ளன. தானாக மூடி திறக்கும் மேற்கத்திய கழிவறை சாதனம் மட்டும் ரூ.12 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு உள்ளது.

முதல்வரின் இல்லத்தில் 4 அதிநவீன ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.64 லட்சமாகும். தொலைக்காட்சி பெட்டிகளுக்கான ஒலிபெருக்கிகள் ரூ.4.5லட்சத்துக்கு வாங்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் பிரிட்ஜ் ரூ.9 லட்சத்துக்கும் மைக்ரோவேவ் ஓவன் ரூ.6 லட்சத்துக்கும் வாங்கப்பட்டு உள்ளன. வீட்டுக்கு தேவையான ஷோபாக்கள் ரூ.10 லட்சத்துக்கும் காபி தயாரிக்கும் இயந்திரம் ரூ.2.5லட்சத்துக்கு வாங்கப்பட்டு உள்ளன.

குளியல் அறையில் பொருத்தப்பட்டுள்ள ஹீட்டர்களின் மதிப்பு மட்டும் ரூ.22.5 லட்சமாகும். சலவை இயந்திரத்தின் மதிப்பு ரூ.2.10 லட்சமாகும். ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடிக்கும் மேல் செலவுசெய்து முதல்வரின் வீடு அரண்மனை போன்று அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறும்போது, “டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மகாராஜா போன்று வாழ்ந்திருக்கிறார். வீட்டின் ஜன்னல் திரைகள் மட்டும்ரூ.5.6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன. கழிவறை, சமையல் அறைக்கான செலவுகளை பார்த்தால் தலைசுற்றுகிறது” என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி அதிருப்தி தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறும்போது, “டெல்லியை சேர்ந்த மக்களில் சுமார் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குடிசை பகுதிகளில் வாழ்கின்றனர். முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் சொகுசு மாளிகையில் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார். மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து வீட்டை அலங்கரித்துஇருக்கிறார்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here