தீபஒளி திருநாளில் சென்னை முதல் தேனி வரை பல்வேறு நிகழ்வுகளில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியிருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை வியாசர்பாடியில் முன்பகை காரணமாக தனுஷ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரில் மேகலா என்ற இளம்பெண்ணும், திருச்சியில் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர். கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்தவர்களை தட்டிக் கேட்ட காவல்துறை சிறப்பு உதவியாளர் செந்தில்குமாரை, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.
தீப ஒளி திருநாளில் நடைபெற்ற பெரும்பாலான குற்றங்களுக்கு மது தான் காரணம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு தான் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் வரை திருவிழா காலங்களில் ஒரு வாரத்திற்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதை கண்டு கொள்ளாததன் விளைவு தான் இந்த படுகொலைகள் ஆகும். ஒரே நாளில் நடந்த 10 கொலைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் முன்பகை தான் காரணம் ஆகும். இத்தகைய நிகழ்வுகளை காவல்துறை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சட்டம் – ஒழுங்கு தான் மிகவும் முக்கியமானதாகும். இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு குறித்து வெளி உலகில் தவறான பெயர் ஏற்பட்டு விடும். இதைத் தடுக்க தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழக அரசும், காவல்துறையும் சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னொருபுறம், திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் குடிநீர் மற்றும் குப்பை பிரச்சினைகள் குறித்து புகார் அளிப்பதற்காக வந்த கார்த்திக் குமார் என்பவரை அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், பேரவைத் துணைத் தலைவருமான ரவிசங்கர் தாக்கி விரட்டியடிக்கும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.














