‘கர்நாடகா மேகேதாட்டு அணை கட்டக்கூடாது’ என ராகுல் கூறினால் பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார்: அன்புமணி

0
24

‘கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகத் தயார்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் கர்நாடகா சென்று, கர்நாடக முதல்வரைச் சந்தித்து பேசிவிட்டு மேகேதாட்டு அணை கட்டும் பகுதியைப்பார்வையிட்டால் அது தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்.

கர்நாடகா அணையே கட்டக்கூடாது என்று நாம் கூறிக்கொண்டிருக்கும்போது, அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இது தவறான போக்கு.

இவ்விவகாரம் சம்பந்தமான பேச்சுவார்த்தை மத்திய அரசிடமும், பிரதமர் மோடியிடமும் நடக்க வேண்டும். காங்கிரஸ் – பாஜக கூட்டு சதி அதேநேரம் கர்நாடகா இதை வேறுவிதமாகக் கொண்டு செல்கிறது.

மத்தியில் உள்ள பாஜக, கர்நாடகத்தின் காங்கிரஸ் கூட்டு சதி செய்கின்றன. இந்த சூழ்ச்சியில் முதல்வர் விழுந்து விடக்கூடாது.

அதேபோல் கர்நாடக அரசு, தமிழகத்தின் அனுமதி பெற்றுதான் அணை கட்ட வேண்டும் என்று இல்லை என, உச்ச நீதிமன்றம் 2018-ல் உத்தரவு பிறப்பித்ததாக நாடாளுமன்றத் தில் மத்திய அமைச்சர் கூறியிருப்பது முற்றிலும் தவறானது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில், காடுகளை அழித்து, கிரேட் நிக்கோபார் திட்டத்தை அமைக்கக் கூடாது என்கிறார் ராகுல் காந்தி. அதேபோல் 12,500 ஏக்கர் காடுகளை அழித்து கட்டப்பட இருக்கும் மேகேதாட்டு அணையை கட்டக்கூடாது என்று சொல்ல ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா? இல்லை தமிழக காங்கிரஸ் தலைவருக்காவது தைரியம் இருக்கிறதா? கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என்று ராகுல் காந்தி ஒரேயொரு வார்த்தை கூறிவிட்டால், நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here