கோடாரி தாக்குதலில் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் மண்டை ஓடு உடைந்தது. இதற்காக சவுதி அரேபியாவில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று ஐக்கிய அரபு அமீரக புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபிளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. விமானத்தைக் கடத்த முயன்ற ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமியிடம் ஐக்கிய அரபு அமீரக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புலனாய்வுக் குழு வட்டாரங்கள் கூறியதாவது: அவசரகால பயன்பாட்டுக்கான கோடாரியால் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் பின்னந்தலையில் துணை பைலட் திடீர் தாக்குதல் நடத்தினார்.
இதில் ஸ்மித் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இ்த்தாக்குதலில் அவரது மண்டை ஓடு உடைந்துள்ளது. ஓர் எலும்பு துண்டு மூளையில் பதிந்துள்ளது.
ஃபிளை துபாய் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மண்டை ஓடு உடைந்திருப்பது உறுதி்யானது. இதைத் தொடர்ந்து அவருக்கு தலையில் அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூளையில் பதிந்திருந்த எலும்புத் துண்டு அகற்றப்பட்டது.
பைலட் ஸ்மித்தின் கை, கால்கள், மார்பு பகுதி, மேல்வயிறு ஆகியவற்றிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் ஸ்மித்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நலம் வேகமாக தேறி வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
காசா தாக்குதலுக்கு பழிவாங்க சதி
இஸ்ரேலின் உளவுத் துறை (மொசாத்) வட்டாரங்கள் கூறியதாவது: ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள ரகசிய இடத்தில் ஓமன் துணை பைலட் ஹமாம் அல் ஹமாமியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த விசாரணையில் பங்கேற்க இஸ்ரேல் கேபினட் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன்படி மொசாத்தின் சிறப்பு நிபுணர்கள், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் இணைந்து ஹமாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசா மீதான ராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அவர் எத்தனை முறை இஸ்ரேலுக்கு விமானத்தை இயக்கி உள்ளார். இஸ்ரேலில் எங்கெல்லாம் சென்றார். அவர் தனிநபரா, அவரது பின்னால் தீவிரவாத இயக்கம் இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
