Home மாநில செய்திகள் தவெக எம்எல்ஏ முஸ்தபா அளித்த குதிரை பேர புகார்: மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம்...

தவெக எம்எல்ஏ முஸ்தபா அளித்த குதிரை பேர புகார்: மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம் விசாரணை

0

தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க மதுரை மத்திய தொகுதி மதார் பதூருதீனிடம் ரூ.30 கோடி குதிரை பேரம் பேசியதாக முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மதார் பதூருதீன் என்ற முஸ்தபா. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளரிடம் அவர் பேசியபோது, “திமுக அதிமுக, கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து, எங்களது நல்லாட்சியை கெடுக்கப் பார்க்கின்றனர். திமுகவைப் போன்று அதிமுகவும் எங்களது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர்.

சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் மதுரையில் இருந்து என்னிடம் தொலைபேசியில் பேசினார். எங்களது ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களிக்க முதலில் ரூ.15 கோடியும், வாக்கெடுப்புக்குப் பிறகு ரூ.15 கோடியும் என ரூ.30 கோடி வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அதற்கெல்லாம் நாங்கள் மயங்க மாட்டோம். என்னிடம் குதிரை பேரம் பேசியவர் குறித்த விவரம் விரைவில் வெளிவரும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பி.எம்.மன்னன் தன்னிடம் குதிரை பேரம் பேசியதாக மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் மாநகராட்சி துணை மேயர், அதிமுகவைச் சேர்ந்தவருமான பி.எம் மன்னன் வீட்டுக்குச் சென்றனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவரிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஆரோக்கியராஜ், ஆய்வாளர் வீரம்மாள் உள்ளிட்ட போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த அதிமுகவினர் குதிரைப் படை வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையப் பகுதியில் குவிந்துள்ளனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கெனவே கோவையில் குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது மதுரையிலும் இவ்விவகாரத்தில் அதிமுக பிரமுகரை போலீஸ் பிடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version