Home மாநில செய்திகள் விருதுநகரில் கனிம வள கடத்தலைத் தடுக்க 40 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

விருதுநகரில் கனிம வள கடத்தலைத் தடுக்க 40 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

0

விருதுநகர் மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க துணை வட்டாட்சியர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 40 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான குவாரிகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் விதிமுறை மீறல்கள் நடப்பதாகவும், கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், குவாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் துணை வட்டாட்சியர்கள் தலைமையில் வருவாய்த் துறையில் வருவாய் ஆய்வாளர், விஏஓ, கிராம உதவியாளரும், ஊரக வளர்ச்சித் துறையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளர், பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளர் கொண்ட 40 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கனிம வளங்கள் தொடர்பான விதிமீறல்களை கண்காணித்து, முக்கியமான சட்ட விரோத கனிம கொள்ளை தொடர்பாக பெறும் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யவும், முறையான கால இடைவெளியில் ரோந்து மற்றும் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இப்பணிகளை மேற்பார்வை செய்யவும் ரோந்துக் குழு முறையாக ஆய்வுக்கு செல்வதை கண்காணிக்கவும் அன்றாட அறிக்கை பெற்று உரிய மேல் நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியர், கோட்டாட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி ஆகிய வட்டாரங்களில் 7 பேர் கொண்ட தலா 4 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இக்குழுவினர், சட்டவிரோதமாக கனிமங்களை அகழ்ந்து எடுத்துச் செல்வது தொடர்பாக கண்காணிக்கவும், குவாரிகள், கனிம சேமிப்பு மற்றும் ஏற்றுமதிக்குக் கொண்டு செல்லும் பகுதிகளில் உரிய அனுமதிகள் மற்றும் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மற்றும் வாகன தணிக்கை மேற்கொள்ளுதல், சட்ட விரோதமாக கனிமம் எடுக்கப்பட்டாலோ கடத்தப்பட்டாலோ சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version