பால் விலையை உயர்த்தப் போவதாக எழுந்த தகவலையடுத்து, உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த பரிந்துரைக்கு பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பால் விலை உயர்வு தொடர்பான தகவலுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தரமான பால் மற்றும் பால் பொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் நலன், பால் கொள்முதல் விலை மற்றும் நுகர்வோரின் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆவின் செயல்பட்டு வருகிறது.
பால் விலை உயர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தவறான செய்தியாகும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம்.
