Home உலக செய்திகள் அலி லாரிஜானி படுகொலை எதிரொலி: இஸ்ரேல் தலைநகரில் ஈரான் ‘க்ளஸ்டர் குண்டு’ வீச்சு!

அலி லாரிஜானி படுகொலை எதிரொலி: இஸ்ரேல் தலைநகரில் ஈரான் ‘க்ளஸ்டர் குண்டு’ வீச்சு!

0

இஸ்​ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்​பெரிய தலை​வ​ரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்​ரெசா சுலை​மானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான்.

செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்தச் சூழலில், மக்கள் தொகை அதிகம் உள்ள டெல் அவிவ் நகரில் இந்த குண்டுகளை நேற்றிரவு ஈரான் ராணுவம் பயன்படுத்திய நிலையில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், இதுவரையிலும் இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 14 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று மாலை ஈரானின் புஷெர் அணுசக்தி நிலையம் அருகே ஏவுகணை ஒன்று விழுந்தது. ஆனால் இதனால் அணுசக்தி நிலையத்துக்கோ மக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ராஸி தெரிவித்துள்ளார். மேலும், அணுசக்தி நிலையத்தின் மீது தவறுதலாகக் கூட தாக்குதல் நடந்துவிடக் கூடாது அளவுக்கு மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் கவனமாக இருக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது கூட்டாக தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்க – இஸ்ரேல் நாடுகள், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை முறியடிக்கவே இத்தாக்குதல் என்று விளக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சகம் சார்பில் போர் பதற்றத்தைக் குறைப்பது, மோதலை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பாக வழங்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச தலைவராக பதவியேற்ற பின்னர் காமேனி முதன்முறையாக வெளியுறவுக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர், “அமெரிக்காவும், இஸ்ரேலும் அடிபணியும் வரை அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது என்பது சரியானது அல்ல. அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று கூறியதாகத் தகவல்.

இருப்பினும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரம் ஏதும் வெளியிடப்படவில்லை. அவர் நேரில் பங்கேற்றாரா அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் பங்கேற்றாரா என்பதுகூட தெரியவில்லை.

ஈரான் கடற்கரையை குறிவைக்கும் அமெரிக்கா:

போர்ப் பதற்றச் சூழல் சற்றும் குறையாத சூழலில், ஈரானின் கடற்கரை பகுதிகளை அமெரிக்க ராணுவம் குறிவைத்துள்ளது. கடற்கரை பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈரான் ஏவுகணைக் கப்பல்களை அழித்து ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை 3% உயர்ந்தது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்தே எண்ணெய் விலை 45% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போர் ஜூன் மாதம் வரை நீடிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version