துபாயில் நடக்கும் ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் நடிகர் அஜித் தலைமை யிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ பங்கேற்றுள்ளது. இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டபோது, அஜித் ஓட்டிய கார், விபத்தில் சிக்கியது. இந்நிலையில் ரேஸில் இருந்து அவர் விலகினார். ஆனால் அவர் அணி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில், அஜித்குமார் ரேஸிங் அணி 991 பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இந்த வெற்றியைத் தேசிய கொடியை ஏந்தி உற்சாகத்துடன் அஜித் கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்திய அணி ஒன்று சர்வதேச ரேஸில் 3-வது இடத்தைப் பிடிப்பது பெரிய விஷயம் என்கிறார்கள். அதிலும் பங்கேற்ற முதல் போட்டியிலேயே இச்சாதனையைப் படைத்துள்ளதால், நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகர் மாதவன் அஜித்துக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அது தொடர்பான வீடியோவை வெளி யிட்டுள்ள மாதவன், அஜித் குறித்து தான் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டிக்காகத் துபாய் சென்றுள்ள நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ஆரவ், வசந்த் ரவி, இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் அஜித்துக்கு நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அஜித்குமார் சார் மற்றும் அவரது குழுவினர் 991 பிரிவில் 3-ம் இடம் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். நமது நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இன்னும் பெருமை சேர்ப்பதற்காக, தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.