கர்நாடகாவில் நடிகர் தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை: வழக்கை மீண்டும் விசாரிக்க போலீஸார் நடவடிக்கை

0
142

பிரபல க‌ன்னட நடிகர் தர்ஷன் (47) தனது தோழி பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை (33) அடித்துக் கொன்றதாக கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில்பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்ஸர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்படை போலீஸார் 17 பேரையும் காவலில் எடுத்து ஒருவாரத்துக்கு மேலாக தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், தர்ஷன் தனது தோழி பவித்ரா கவுடாவின் கண் எதிரில் ரசிகரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தது உறுதியாகியுள்ளது. மேலும் கொலையை மறைக்கவும், தன்னை காப்பாற்றிக்கொள்ளவும் சக கொலையாளிகளுக்கு அவர் ரூ.30 லட்சம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தர்ஷன் தனது மேலாளர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் உமாபதி கவுடா உள்ளிட்டோரை தாக்கிய‌தாகவும் தனிப்படை போலீஸாருக்கு புகார் வந்தது. ஆனேக்கலில் உள்ள தர்ஷனின் பண்ணை வீட்டின் மேலாளர் ஸ்ரீதர் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் தற்கொலை செய்துகொண்டார். தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என அவர் கடிதம் எழுதி வைத்ததால், அதனை தற்கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளின் துன்புறுத்தல் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ரேணுகா சுவாமி வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீஸார், இவ்வழக்கையும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என உள்துறைக்கு கடிதம் எழுதினர். இதற்கு உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா அனுமதி அளித்தார்.

இதையடுத்து டிசிபி சந்தன், ஏசிபி கிரீஷ் தலைமையிலான போலீஸார் ஸ்ரீதர் வழக்கை தூசி தட்டி விசாரிக்க தொடங்கியுள்ளனர். இதேபோல தர்ஷனின் முன்னாள் மேலாளர் மல்லிகார்ஜுன் கடந்த 2018-ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். அவர் என்ன ஆனார் எனத் தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என போலீஸாருக்கு கோரிக்கை வந்துள்ளது.

தர்ஷன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்துக் கொண்டு ‘டி கேங்'(Darshan Gang) என்ற பெயரில் ஏராளமானவர்களை மிரட்டியதாகவும், பண்ணை வீட்டில் வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. சிலரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்க்கும் ஆடியோக்களும், பார் ஊழியரை தாக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தர்ஷனுக்கு எதிரான புகார்கள் குவிந்து வருவதால் அவரது குடும்பத்தினரும் கூட்டாளிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.