குடும்பங்கள் கற்க வேண்டிய பாடம் | நூறு சாமி – பெண் திரை

0
22

எனது ஏழாம் வயதிலே நான் அதிர்ச்சியோடு அறியவந்தது உறவுக்காரர்கள் இல்லங்களில் உதவிக்கு அழைக்கப்படும் பட்டா சித்தியின் கொடுமையான கதை. அவர் எங்கள் தந்தைக்குச் சித்தி. ஐந்தரை வயதில் திருமணம் முடித்து அந்தப் பச்சிளம் கணவன் அடுத்த ஆண்டே மரித்துப் போக, பருவமடைவதற்கு முன்பே கைம்பெண் ஆனவர். அப்படியே தொண்ணுறு வயதுவரை வாழ்ந்து மறைந்தவர்.

எந்த வயதில் ஓர் ஆண் தன் மனைவியைப் பறிகொடுத்தாலும் மறுமணம் செய்துகொள்வதற்கான இசைவை மனைவியிடம் இருந்து பெற்றுத்தரும் சடங்கு இருக்கிறது. அப்படியான சத்தியத்தை மரித்த கணவன் தன் மனைவிக்கு அளித்துவிட்டுப் போகும் சாங்கியமே இல்லை. ஆனால், தனித்துவிடப்பட்ட அவளது வாழ்க்கையை நோக்கி ஊரே ஜன்னல் திறந்து வைத்துப் பார்த்துப் புறணி பேசிக்கொண்டு இருக்க, சமூகம் தானே ஓர் உரிமையை எடுத்துக்கொண்டு விடுகிறது. அவளது வாழ்க்கைக்கும் ஒரு பொருள் உண்டு, அதைத் தேடிக்கொள்ளும் உரிமை அவளுக்கு உண்டு என்பதை உரத்துப் பேசி இருக்கும் ஓர் அன்பான முயற்சிதான் ‘நூறு சாமி’ திரைப்படம்.

கண்ணியத்தோடு வாழ்ந்து பிள்ளைகளைக் கரை சேர்க்க வேண்டும் என்று துடிக்கும் செல்வி, ஓர் இளம் கைம்பெண். தனித்திருக்கும் பெண்ணின் வீட்டுக் கதவுகள் இரவுப் பொழுதுகளில் தட்டப்படுவதைப் போன்ற வன்முறை வேறு இருக்க முடியாது. வெளியே இருந்து ஒலிக்கும் கயவர்களின் சங்கேத அழைப்புகள் அவளது நிராதரவான நிலைக்கு விடப்படும் குரூர சவால் அன்றி வேறென்ன?

‘நூறு சாமி’ கைம்பெண் பார்வையில் இருந்து விரியும் ஒரு துயரக் கவிதை. அதை ஓர் அன்புப் பாடலாக மூத்த மகன் எப்படி வடிவமைக்கத் தலைப்படுகிறான் என்பதையும் அதில் அவளும் அவனும் எதிர்கொள்ளும் சவால்களையும் மிகுந்த இயல்பான மொழியில் பேசுகிறது படம். ஒரு கைம்பெண் வாழ்க்கையில் மற்றுமொரு வசந்தம் துளிர்க்க பெற்ற தாய்கூட அனுமதிக்க முடியாது என்கிற நிலையெடுப்பதும் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்தான். மறுமணத்தை இல்லாது செய்ய ஆணவக் கொலையை அந்தக் குடும்பம் ஓர் ஆயுதமாகக் கையிலெடுப்பது சமூகத்தின் அதிர்ச்சி தரிசனம். செல்வி இவ்வளவுக்கும் ஈடுகொடுத்து நிற்பதுதான் கதையின் வலு.

இது ஓர் உண்மைக்கதை என்பது கொண்டாட வைக்கிறது. செல்வியாகத் தோன்றும் ஸ்வாசிகா, பல்வேறு உணர்வுகளை மிகவும் இயல்பான உடல்மொழியில் வெளிப்படுத்துகிறார். ஒருபோதும் சமரசத்துக்கோ விரக்திக்கோ உட்படுத்திக் கொண்டுவிடாத பெண்ணாக அந்தக் கதாபாத்திரத்தை வார்த்திருப்பது இயக்குநரைப் பாராட்ட வைக்கிறது.

தனது எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய துணையாக செல்வி தேர்வு செய்யும் ஏழுமலையாக, படத்தின் கடைசிக் கட்டத்தில் தோன்றினாலும் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் கவித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மகன்களாக வரும் அஜய் திஷான் (பாஸ்கர்), சக்தி (விவேக்), பச்சைப்பெருமாளாக பாலாஜி சக்திவேல், அண்ணனாக கருணாஸ் உள்ளிட்ட அனைவரும் கூட்டாகப் படத்தை முழுமையாக்கிவிடுகின்றனர்.

எழுதப் படிக்கத் தெரியாத ஓர் இளம் கைம்பெண் பற்றிய எழுத்தாளர் கல்கியின் ‘கடிதமும் கண்ணீரும்’ எனும் அருமையான சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. அப்போது, பட்டா சித்தி போன்ற இளவயதிலேயே கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுக்கத் தலை நிமிர முடியாது தனிமையில் தவித்தும் அவமதிப்புகளைத் தாங்கியும் தங்களை மெய்ப்பித்துக்கொண்டே அவதிப்பட்டவர்கள் பலர் கண்முன் வந்து போயினர். கால இயந்திரம் மட்டும் இருக்குமானால் அவர்களுக்கும் நியாயம் வழங்கிவிட வேண்டும் என்கிற சிந்தனையைத் தூண்டியது ‘நூறு சாமி’.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here