கல்வி, சுகாதார துறைக்கு நிதி வெகுவாக குறைப்பு: தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

0
265

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நடப்பாண்டில் கல்விக்கு ரூ.44 ஆயிரம் கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.20,198 கோடி நிதிமட்டுமே தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் 3-ல் ஒரு பங்குக்கும் இது குறைவானது.

அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் 1.39 சதவீதம் நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதேபோல, சுகாதாரத் துறைக்கு அதிமுக ஆட்சியில் 0.76 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 0.64 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் கல்வி, சுகாதாரத் துறைகள் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்கூட இல்லாமல் சீரழிந்து வருவதற்கு, போதிய நிதிஒதுக்கீடு செய்யப்படாததே காரணம். கடந்த மூன்றரை ஆண்டுகளில் 2,027 பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதுமான உயிர்காக்கும் மருந்துக கூட இல்லை.

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது. மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக 3 மதுக்கடைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டால், நானே அந்த கடைகளுக்குபூட்டு போடுவேன். முல்லை பெரியாறு அணையில், துணை கண்காணிப்புக் குழுவின் ஆய்வை தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தது பாராட்டத்தக்கது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here