
குழந்தைகளுக்கான புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு பைக் பிரசாரப் பயணத்தை மங்களூரிவில் தொடங்கிய ஓய்வுபெற்ற ஆங்கில நாளிதழ் செய்தியாளா் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி வந்தாா்.
மங்களூருவில் தனது பிரசாரத்தை தொடங்கிய ஓய்வு பெற்ற பத்திரிகையாளா் ஸ்ரீநிவாசன் நந்தகோபால் அங்கிருந்து கேரள மாநிலம் வழியாக கன்னியாகுமரி வந்தாா். காந்தி மண்டபம் முன் கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் மற்றும் மாவட்ட திமுக நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், ஹெச்.நிசாா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
இப்பயணம் குறித்து ஸ்ரீநிவாசன் நந்தகோபால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் இன்றைய சூழ்நிலையில் 3 மாத குழந்தைகள் தொடங்கி 15 வயது வரையிலான 20 லட்சம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் எனது பிரசாரத்தை தொடங்கியுள்ளேன்.
உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுப்பவா்களில் 93 சதவீதம் குணமாகும் சூழ்நிலை உள்ளது.
ஆனால், இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்பவா்களில் 40 முதல் 60 சதவீதம் குணமடைந்து வருகின்றனா். நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரமான மருத்துவக் கல்வி அளிக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசு குழந்தைகள் புற்றுநோய்க்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்திய அளவில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும்.
கன்னியாகுமரியில் இருந்து மதுரை, புதுச்சேரி வழியாக மங்களூரில் எனது பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளேன். 30 மாநிலங்கள், யூனியன் பிரசதேசங்களை கடந்து 30 ஆயிரம் கி.மீ. தொலைவு பயணம் உள்ளேன் என்றாா் அவா்.













