தமிழக பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் நவ.25-ம் தேதி (நேற்று) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஆவணப் பதிவு, ஆவணம் தாக்கல் செய்யும் பணிகளின்போது, ஆதார் அங்கீகாரத்தில் இடையூறு ஏற்பட்டது.
இதுகுறித்து பதிவுத் துறையின் அமைப்பு ஒருங்கிணைப்பு நிறுவனமான டிசிஎஸ்ஸிடம் விசாரித்தபோது, ‘மந்த்ரா’ நிறுவனம் மேற்கொண்ட தொழில்நுட்ப மேம்பாட்டு பணியால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால், சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தவிர வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையிலான ஆவணங்களே பதிவு செய்யப்பட்டன.
பின்னர், இந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, இரவு 8 மணி வரை மொத்தம் 8,425 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் பதிவுத்துறை தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.














