ஜெம் வீரமணி வழக்கில் சிக்கிய காவல் துறையினர் மீது விரைவில் சஸ்பெண்ட் நடவடிக்கை பாய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2 பெண் காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் பலரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல கிரானைட் தொழில் அதிபர் ஜெம் வீரமணி (84) மீது சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் 8 வழக்குகளைப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அவரது உதவியாளர் சாந்தி, கணவர் மகேந்திர சிம்மன், வீரமணி நிறுவனத்தில் நீண்ட காலம் பணி செய்து வந்த கணேசன், பாலியல் வன்கொடுமை குற்றத்துக்குச் சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த வீரமணியின் கார் ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு போலீஸார் கடந்த 11-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
720 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிகையில் வீரமணி, அவரது கார் ஓட்டுநர்கள் பார்த்திபன், பாபு ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன இந்நிலையில், சிறுமிகள் தொடர்பான புகார் அளிக்கப்பட்ட போது உரிய விசாரணை நடத்தாமல் வழக்கை தாமதப்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் உட்பட 7 காவல் துறையினரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக சஸ்பென்ட் நடவடிக்கை பாய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வீரமணி வழக்கில் விரைவில் 2-ம் கட்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்கான பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் காவல் துறையினர், பணம் பறித்தவர்களின் பெயர்கள் இடம்பெற உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி, ஆவடி காவல் ஆணையரக தலைமையிடத்து துணை ஆணையர் வனிதா ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலர் ஏ.கார்த்திக் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.














