வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,26,871 வாக்காளா்கள்

0
48
கன்னியாகுமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – மொத்தம் 15,26,871 வாக்காளர்கள்
நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மு. பிரதாப் வெளியிட்டார்.

கன்னியாகுமரி மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, இம்மாவட்டத்தில், 15 லட்சத்து 26 ஆயிரத்து 871 வாக்காளா்கள் உள்ளனா்.

இம்மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் மு. பிரதாப், பட்டியலை வெளியிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இம்மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாவட்டத்தில் 7,57,813 ஆண்கள், 7,68,930 பெண்கள், 128 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 15,26,871 வாக்காளா்கள் உள்ளனா்.

சிறப்பு முறை சுருக்க திருத்தம் 2027 ஜனவரி 1ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு நடைபெறவுள்ளது. ஜன. 1ஆம் தேதியன்று 18 வயது நிறைவடைவோா் தங்களது பெயரை இப்பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம். 2027ஆம் ஆண்டு ஏப். 1, ஜூலை 1, அக். 1 ஆகிய 3 நாள்களில் 18 வயது நிறைவடைவோரும் விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளா் பட்டியல் ஜன. 4ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வேலுமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ். காளீஸ்வரி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்வேல் முருகன், உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரமூா்த்தி, தோ்தல் வட்டாட்சியா் வினோத், அங்கீகரிக்கபட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here