‘மாணவர் அகிலன் விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’: மு.வீரபாண்டியன்

0
26

‘பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் சாதிய ஒடுக்குமுறையை அனுமதிக்க கூடாது. அகிலனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும், மற்றொரு மாணவர் இத்தகைய கொடுமைக்கு ஆளாகாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த அருந்ததியர் சமூகப் பிரிவு மாணவர் அகிலன், தொடர்ச்சியான சாதிய அவமதிப்பு, துன்புறுத்தல் மற்றும் சமூக ஒடுக்குமுறை காரணமாக 21.10.2026 ஆம் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

மாணவன் அகிலனை தற்கொலைக்கு நெட்டித் தள்ளிய சாதிய வன்கொடுமை, தமிழ்நாட்டின் பள்ளிகளில், கல்வி நிறுவனங்களில் பரவலாக நிலவி வருவதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன. அரசு உதவித்தொகையை பெறும் மாணவர்களை வகுப்பறையில் அடையாளப் படுத்திய ஆசிரியர், அகிலனின் உணவுப் பழக்கத்தைக் குறிப்பிட்டு அவமதித்ததாகவும், அதனைத் தொடர்ந்து சில மாணவர்கள் அவரைச் சாதிப் பெயரால் இழிவுபடுத்தி, துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாணவன், அவரது பெற்றோர் மூலமும், சில ஆசிரியர்கள் மூலமும் தலைமை ஆசிரியருக்கு இப்பிரச்சினை தொடர்பாக தெரிவித்த பிறகும், அவர் தீண்டாமை குற்றச் செயல்களை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியது ஏன் என்பதை கடுமையாக விசாரிக்க வேண்டும்.

மாணவரின் சுயமரியாதை, கண்ணியம் ஆகியவற்றை காக்கத் தவறிய பள்ளித் தலைமை ஆசிரியர் மீதும், நிர்வாகம் மீதும், தொடர்புடைய ஆசிரியர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் குற்ற எண் 446/2026-இல் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 115(2), 108 மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(2) (ஸ்) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதிய அவமதிப்பு மற்றும் சமூகப் புறக்கணிப்பு தொடர்பாக பொருந்தக்கூடிய பிரிவுகளையும் சேர்த்து வழக்கை விசாரிக்க வேண்டும்.

தமிழ்நாடு கேலிவதைத் தடுப்புச் சட்டம், 1997-இன் பிரிவுகள் 3, 4 கேலிவதையைத் தடைசெய்து தண்டனை விதிக்கின்றன. புகாரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையைப் பிரிவு 6(1) விதிக்கிறது.

அவ்வாறு செயல்படத் தவறும் கல்வி நிறுவனத் தலைவர் அல்லது நிர்வாகப் பொறுப்பாளர், பிரிவு 7-இன்படி கேலிவதைக்குத் துணைபோனவராகக் கருதப்படுகிறார். பள்ளித் தலைமை மற்றும் நிர்வாகத்தின் பொறுப்பையும் இச்சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும்.

தற்போதைய விசாரணை அதிகாரி வேண்டுமென்றே விசாரணையைத் தாமதப்படுத்தி, பாரபட்சமாக செயல்படுகிறார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விரைவாகவும் முறையாகவும் விசாரணை நடத்த வேண்டிய கடமையை அவர் நிறைவேற்றவில்லை.

அவரை உடனடியாக மாற்றி, வன்கொடுமைத் தடுப்பு விதிகள், 1995-இன் விதி 7(1)-இன்படி, அனுபவமும் திறனும் நேர்மையும் கொண்ட, காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அதிகாரியை உரிய நியமன ஆணை மூலம் விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

அகிலனைச் சாதிய வன்கொடுமையால் தற்கொலைக்குத் தள்ளிய ஆசிரியர்கள் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்களது சமூகச் செல்வாக்கால் சாட்சிகள் அச்சுறுத்தப்படுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பாதுகாப்பையும் நீதியின் மீதான நம்பிக்கையை உறுதிசெய்யவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இப்பள்ளியில் கடந்த காலங்களிலும் சாதியப் பாகுபாடும் வன்கொடுமைகளும் நிலவியுள்ளனவா, புகார்கள் மறைக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சுயாதீனக் குழு மூலம் விசாரிக்க வேண்டும். விசாரணை முடிந்து மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வரை, உரிய சட்ட நடைமுறையில் பள்ளி நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மாணவர்களின் கல்வி தடையின்றி தொடர்வதையும் உறுதிசெய்ய வேண்டும்.

மாணவர்களின் சாதியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வகுப்பறையில் குறிப்பிடக்கூடாது; உதவித்தொகை விவரங்களைத் தனிப்பட்ட முறையிலேயே தெரிவிக்க வேண்டும்.

மீறும் ஆசிரியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிபதி கே சந்துரு குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளி நல அலுவலர் நியமனம் மற்றும் ரகசியப் புகார் தீர்வு அமைப்பு குறித்த பரிந்துரைகள் 12, 13 ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் சாதிய ஒடுக்குமுறையை அனுமதிக்க கூடாது. அகிலனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும், மற்றொரு மாணவர் இத்தகைய கொடுமைக்கு ஆளாகாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here