ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து டெல்லிவந்த விமானம், கடத்தல் எச்சரிக்கையைத் தொடர்ந்து நேற்று காலை ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியாவின் AI 2030 (போயிங் 787-9 ரக) விமானம், கடத்தல் அல்லது சட்டவிரோதச் செயலைக் குறிக்கும் சர்வதேச அவசரக் குறியீடான 7500-ஐ ரேடார் சமிக்ஞைக் கருவி மூலம் ஒளிபரப்பிக் கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமை விமானி விடுத்த எச்சரிக்கை, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்குக் கிடைத்ததை அடுத்து, விமானம் ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டது. தரையிறங்கியதும் விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. விமான நிலையப் பாதுகாப்பு அமைப்புகள், உள்ளூர் காவல் துறை, தீவிரவாத எதிர்ப்புப் படை குழுக்கள் இணைந்து விமானம், பயணிகள், அவர்களின் உடைமைகளை பரிசோதித்தன.
பயணிகளும் விமானிகளும் பாதுகாப்புப் படையினர் மேற்பார்வையில் படிப்படியாக இறக்கப்பட்டனர். டெல்லியில் தேசியப் பாதுகாப்புப் படை தயார்நிலையில் வைக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்தே விமானம் தரையிறக்கப்பட்டதாக மால்வியா நகர் உதவி காவல் ஆணையர் ஷிவ் தயாள் தெரிவித்தார்.
சோதனைகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு முகமைகள் விமானத்தையும் பணியாளர்களையும் பாதுகாப்பானவை என அறிவித்தன. பின்னர் பயணிகள் மீண்டும் விமானத்தில் ஏறினர். விமானம் விரைவில் டெல்லிக்குப் பயணத்தைத் தொடரும் என ஏர் இந்தியா தெரிவித்தது. இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு ஏர் இந்தியா வருத்தம் தெரிவித்தது. பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பே தனது முதன்மை முன்னுரிமை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.














