கோவிலம்பாக்கம் அருகே எஸ்.கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (75). இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் எஸ்.கொளத்தூர் பிரதான சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அங்கன்வாடி அருகே சென்றபோது எதிரே வந்த தண்ணீர் லாரியால் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் தண்ணீர் லாரியின் சக்கரம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் எஸ்.கொளத்தூர் ஏரி அருகே திரண்டனர். அங்கு கைவிடப்பட்ட விவசாயக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து விற்பனைக்காகச் சென்றுகொண்டிருந்த தண்ணீர் லாரிகளை மடக்கிப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், “இப்பகுதியில் அனுமதியின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு தண்ணீர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் லாரிகள் வேகமாக இயக்கப்படுவதால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இப்பகுதியில் தண்ணீர் லாரிகளின் இயக்கத்துக்கு தடைவிதிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
மேடவாக்கம் போலீஸார், “தண்ணீர் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும், அதிவேகமாக இயக்கப்படும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை இளைஞர்கள் விடுவித்தனர்.














