ஆடவர், மகளிர், கலப்பு அணிகள் அபாரம்: வில்வித்தையில் இந்தியாவுக்கு ஹாட்ரிக் தங்கம் @ ஆசிய விளையாட்டு

0
20

ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 12-வது நாளான நேற்று வில்வித்தையில் அணிகள் பிரிவில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் காம்பவுண்ட் பிரிவில் இந்தியா ஹாட்ரிக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு அரை இறுதியில் ஜோதி சுரேகா வெண்ணம், சிகிதா, பிரிதிகா பிரதீப் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 234 – 233 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி, வூனியர், யு வாங் ஃபங்யாவோ வெய் ஆகியோரை உள்ளடக்கிய சீனாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் இந்திய மகளிர் அணி 238 – 234 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று உலக சாதனையை சமன் செய்து தங்கப் பதக்கம் வென்றது.

இதற்கு முன்னர் தென் கொரியா அணி 2014-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற போட்டியில் 238 புள்ளிகளை குவித்து உலக சாதனையும், ஆசிய விளையாட்டு சாதனையையும் படைத்திருந்தது.

கலப்பு அணி

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிகிதா தனிபார்தி, சாஹில் ராஜேஷ் ஜாதவ் ஜோடி தாய்லாந்தின் தனாரத்பிதினான் சனிதப்பா, சிப்பகோர்ன் கோகேயூ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சிகிதா தனிபார்தி, சாஹில் ராஜேஷ் ஜாதவ் ஜோடி 156 – 155 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிகிதா, சாஹில் ஜோடியானது கொரியாவின் ஜுங்யூன் பார்க், சோய் யூன் கியூ ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டி 157-157 என்ற கணக்கில் டையில் முடிவடைந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷூட் ஆஃப் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் சிகிதா தனிபார்தி, சாஹில் ராஜேஷ் ஜாதவ் 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

இதன் வாயிலாக வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது தனிபார்தி, சாஹில் ராஜேஷ் ஜாதவ் ஜோடி. வில்வித்தையில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றனர்.

ஆடவர் அணி

ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ், கணேஷ் மணிரத்னம் திருமுரு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 238-237 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜியாஹோ லியாவோ, ஜின்யி லியு, ஜிங்ஜு ஷி ஆகியோரை உள்ளடக்கிய சீனா அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

ஸ்குவாஷில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதி

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்தன. இந்திய ஆடவர் அணி கால் இறுதி சுற்றில் 2-0 என்ற கணக்கில் குவைத் அணியை தோற்கடித்தது. இந்திய வீரர்களான வீர் சோட்ரானி 12-10, 8-11, 11-0, 11-5 என்ற செட் கணக்கில் பாதர் அல்மோக்ரெபியையும், அபய் சிங் 11-3, 11-4, 11-8 என்ற செட் கணக்கில் அமர் அல்-தமிமியையும் வீழ்த்தினர்.

இந்திய மகளிர் அணி கால் இறுதி சுற்றில் 2-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது. இந்திய வீராங்கனைகளான தன்வி கன்னா 11-6, 4-11, 15-13, 11-1 என்ற செட் கணக்கில் ஆவ் யங்கையும், அனஹத் சிங் 11-7, 11-3, 11-4 என்ற செட் கணக்கில் ஆவ் யங் பெய் யானையும் தோற்கடித்தனர்.

துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடிக்கு தங்கம்: நீரு தண்டா, கைனான் செனாய் அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணிகள் டிராப் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரு தண்டா, கைனான் செனாய் ஜோடி 34 புள்ளிகளை குவித்து ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது. இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் தோகாவில் நடைபெற்ற போட்டியில் கத்தார் அணி 30 புள்ளிகளை குவித்ததே சாதனையாக இருந்தது. இதனை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது இந்திய ஜோடி.

கத்தாரின் முகமது அல்-ருமைஹி, ரே பாசில் ஜோடி 32 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. சீனாவின் குய் யிங், சன் யுனாங் ஜோடி 23 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் நீரு தண்டா வெல்லும் 3-வது பதக்கம் இதுவாகும். அவர், மகளிருக்கான தனிநபர் டிராப் பிரிவில் தங்கப் பதக்கமும், அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார்.

ஜப்பான் ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்கள் வென்றுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 7 தங்கம் உட்பட 22 பதக்கங்களை கைப்பற்றி இருந்தது.

இறுதிப் போட்டியில் லவ்லினா போர்கோஹைன்

ஆசிய விளையாட்டு போட்டி குத்துச்சண்டையில் மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் நடாலியா போக்தனோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் பிரியா கங்காஸ் 1-4 என்ற கணக்கில் உலக சாம்பியனான சீனாவின் யாங் செங்யு-விடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஆடவருக்கான 90 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் கபில் போகாரியா 1-4 என்ற கணக்கில் உலக சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் துராபெக் கபிபுல்லாயேவிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியா 6 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. பிரியா கங்காஸ், கபில் போகாரியா ஆகியோருடன் நரேந்தர் பெர்வாலும் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளார். லவ்லினா போர்கோஹைன் (65 கிலோ), அங்குஷ் பங்ஹால் (80 கிலோ), பர்வீன் ஹூடா (65 கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஹாக்கியில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – தென் கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் 44-வது நிமிடத்தில் இஷிகா சவுத்ரியும், 48-வது நிமிடத்தில் கேப்டன் சலிமாவும் கோல் அடித்து அசத்தினர்.

நாளை (2-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, நடப்பு சாம்பியனான சீனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. சீனா அரை இறுதி சுற்றில் ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது. ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் ஹாக்கியில் இந்திய அணி கடைசியாக 1982-ம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றிருந்தது. தற்போது 44 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பட்டம் வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மல்யுத்தத்தில் சுனில் குமாருக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு போட்டியின் மல்யுத்தத்தில் ஆடவருக்கான கிரகோ ரோமன் 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் 9-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸின் ஜான்ஸ்டனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரகோ ரோமன் பிரிவில் 2 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சுனில் குமார். அவர், கடந்த 2023-ம் ஆண்டிலும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிஷா தாஹியா முதல் சுற்றில் வட கொரியாவின் பாக் சோல் கம்மிடம் தோல்வி அடைந்தார். எனினும் பாக் சோல் கம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் ரெப்பேஜ் சுற்றில் நிஷா தாஹியாவுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதையும் அவர், சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். இந்த சுற்றில் நிஷா தாஹியா, தென் கொரியாவின் பார்க் ஹியோன்-யோங்கிடம் தோல்வி அடைந்தார்.

டென்னிஸ் கால் இறுதியில் சுமித் நாகல்

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் 6-3 6-2 என்ற நேர் செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் செர்ஜி ஃபோமினை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் சுமித் நாகல், சீனாவின் யிபிங் வூ-வை எதிர்கொள்கிறார்.

மற்றொரு இந்திய வீரரான தட்சிணேஷ்வர் 3-6 4-6 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சுன்-ஹ்சின் செங்கிடம் தோல்வி அடைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ராம் பாலாஜி, அனிருத் சந்திரசேகர் ஜோடி 7-6(4), 6-7(7), 8-10 என்ற செட் கணக்கில் சீனாவின் ஃபுமின் சியாங், தியான்ஹுய் சியாங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. மற்றொரு இந்திய ஜோடியான யுகி பாம்ப்ரி, தட்சிணேஷ்வர் 6-7 (5), 3-6 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் யூ-சியூ சூ, சென்ரூய் ஹோ ஜோடியிடம் வீழ்ந்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here