அரசு கட்டிடங்கள் எந்த தரத்தில் உள்ளன என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள 3 வண்ணங்களில் ஸ்டிக்கர் குறியீடுகள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு துறையின் புதிய திட்டங்கள் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: தற்போதைய தலைமைச் செயலகத்தில் செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களோ அல்லது தங்களின் தேவைகளுக்காக வரும் பொதுமக்களோ அமர்ந்து பேசுவதற்குக்கூடப் போதிய இடவசதி இல்லை.
கர்நாடகா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்கள் தங்களது தலைமைச் செயலகங்களுக்கு நவீன கட்டிடக் கட்டமைப்புகளை உருவாக்கிவிட்டன.
அதேபோன்று தமிழகத்திலும் புதிய தலைமைச் செயலகக் கட்டமைப்புக்கான பணி துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்த 50 ஆண்டுகாலத் தேவையை மனதில் கொண்டே இத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது. பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள அனைத்துக் கட்டிடங்கள் குறித்த ஒருங்கிணைந்த தரவுகள் தற்போது முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை.
எனவே, தனியார் நிறுவனங்களைப் போன்று ஒவ்வொரு விவரமும் முறைப்படுத்தப்பட்டு ஆன்லைனில் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்பட உள்ளது. மேலும், அரசு கட்டிடங்களின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் தரம் 3 வண்ண ஸ்டிக்கர்கள் மூலம் வெளிப்படையாகக் குறிக்கப்படும்.
நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு பச்சை வண்ணம், பழுதுபார்க்கப்பட வேண்டிய கட்டிடங்களுக்கு மஞ்சள் வண்ணம், மிகவும் மோசமான மற்றும் அபாயகரமான நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு சிவப்பு வண்ணம் என குறிக்கப்படும். இந்த ஆய்வுப் பணிகள் முதற்கட்டமாகப் பள்ளிகளிலும், அடுத்ததாகக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்படும்.
கட்டுமானப் பணிகளுக்காக இயற்கை மணல் அள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், மாற்றுப் பொருளாகப் பயன்படுத்தப்படும் எம் சாண்ட் தரத்தை உறுதி செய்வது மிகவும் அவசியம்.
கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் எம்-சாண்ட் தரம் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு அதி
காரப்பூர்வ சான்றிதழ் வழங்க வேண்டும். இதில் ஏதேனும் போலித்தன்மை அல்லது முறைகேடுகள் கண்டறியப்பட்டால், கனிம வளத்துறை மூலம் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.














