இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக யாஷ் தாக்குர் சேர்க்கப்பட்டார். வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார். இதனால் இந்திய அணி பவர்பிளேவில் 100 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. ஏனெனில் இதற்கு முன்னர் 2025-ல் இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் பவர்பிளேவில் இந்திய அணி 95 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
மட்டையை சுழற்றிய அபிஷேக் சர்மா 30 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும், ஐசிசி-யின் முழுநேர அந்தஸ்து பெற்ற நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் விளாசிய விரைவான சதம் என்ற சாதனையையும் படைத்தார் அபிஷேக் சர்மா.
இந்திய வீரர்களில் இதற்கு முன்னர் ரோஹித் சர்மா கடந்த 2017-ல் இலங்கை அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டி 20 போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். அதேவேளையில் ஐசிசி-யின் முழுநேர அந்தஸ்து பெற்ற நாட்டைச் சேர்ந்த வீரர்களில் ஜிம்பாப்வே அணியின் சிகந்தர் ராசா, நியூஸிலாந்தின் பின் ஆலன் ஆகியோர் தலா 33 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தனர்.
ஐசிசி-யின் முழுநேர அந்தஸ்து பெறாத நாடுகளில் எஸ்டோனியாவை சேர்ந்த சஹில் சவுகான் கடந்த 2024-ம் ஆண்டு சைப்ரஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 பந்துகளில் சதம் விளாசி அசத்தியிருந்தார். சர்வதேச டி 20 அரங்கில் இதுவே குறைந்த பந்துகளில் விளாசப்பட்ட சதமாக உள்ளது. இந்த வரிசையில் அபிஷேக் சர்மாவின் சதம் 3-வது இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் துருக்கியின் முகமது பஹத் உள்ளார். அவர், 2025-ம் ஆண்டு பல்கேரியாவுக்கு எதிராக 29 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 34 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய சஞ்சு சாம்சன் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவர்களில் 142 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய திலக் வர்மா 2, ஷிவம் துபே 14, இஷான் கிஷன் 10, நிதிஷ் குமார் ரெட்டி 1, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இதையடுத்து 222 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய ஆயத்தமானது.
அந்த அணி 14.1 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 127 ரன்களில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அக்சர் 2, பும்ரா 1, யஷ் தாக்குர் 1 விக்கெட் கைப்பற்றினர். நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.














