ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் இடங்களில் சிக்கல்: 2 பேர் தங்க வேண்டிய சொகுசு கப்பல் அறையில் 3 பேருக்கு அனுமதி

0
19

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த 17 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். தொடக்க விழா நாளை நடைபெற உள்ள நிலையில் வீரர், வீராங்கனைகள் தங்குமிடங்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டு, தெற்காசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் நாடுகள் வீரர்கள் தங்குவதற்காக பிரம்மாண்டமாக விளையாட்டு கிராமம் ஒன்றை அமைப்பார்கள். ஆனால் இம்முறை போட்டியை நடத்தும் ஜப்பான் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக சுமார் 17,000 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சொகுசு கப்பல், கண்டெய்னர் போன்ற தற்காலிக மரக் குடியிருப்புகள் மற்றும் சாதாரண ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நகோயா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘கோஸ்டா செரீனா’ என்ற இத்தாலிய சொகுசு கப்பலில் ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைள் தங்கியுள்ளனர். சுமார் 300 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பலில் 1,500 அறைகள் உள்ளன. இதில் ஒரு அறை 2 வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை 3 பேர் பகிர்ந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அறைகளில் தங்கியுள்ள இந்திய வீரர்கள் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். போட்டியை நடத்தும் ஜப்பானை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த பிரச்சினை உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரே அறையில் வீரர்களும், வீராங்கனைகளும் தங்கும் வகையில் ஒதுக்கீடுகள் இருந்துள்ளன. இதனால் ஜப்பான் வீரர்கள் வேறு இடங்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீரர், வீராங்கனைகளும் ஒரே அறையில் பயிற்சியாளர்களும், உதவி பயிற்சியாளர்களும் தங்கும் சூழ்நிலையும் இருந்து வருகின்றன. படகுப் போட்டி (ரோயிங்), வுஷு, டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள், இந்த சொகுசு கப்பலில் தங்கியுள்ளனர்.

இந்திய குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “இரண்டு வீரர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட சில அறைகளில், மூன்று வீரர்கள் தங்கியுள்ளனர். அறைகள் ஏற்கெனவே சிறியவை, அதனுடன் கூடுதலாக ஒருவரும் இணைவது அசவுகரியமாக உள்ளது.

ஆசிய விளையாட்டு போன்ற பெரிய தொடர்களில் வீரர்கள் தங்களின் சிறந்த திறமையை வெளிப்படுத்த விரும்புகிறார்கள், ஆனால் தற்போது தங்குமிடம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனாலும் நாங்கள் புகார் அளிக்கவில்லை, சூழலுக்கு ஏற்ப சரிசெய்து கொள்கிறோம். இருப்பினும், உணவு விஷயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

இந்திய படகுப் போட்டி அணியின் இரண்டு உதவி பயிற்சியாளர்களுக்கு சொகுசு கப்பலில் இடமளிக்க முடியாததால், அவர்கள் வெளியே தங்கியுள்ளனர். மேலும் சில அதிகாரிகள் தங்களது சொந்த ஏற்பாட்டில் வெளியே தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே படகுப் போட்டி வீரர்-வீராங்கனைகள் உட்பட சில இந்திய விளையாட்டு வீரர்கள் சொகுசு கப்பலில் தங்களது அறை ஒதுக்கீடுக்காக 12 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க தாய்லாந்து வீரர்கள் கடந்த புதன்கிழமை அன்று சொகுசு கப்பலின் வரவேற்பு மையத்தில் தரையில் படுத்து உறங்கிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க வீரர், வீராங்கனைகள் தினசரி பயிற்சிக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. படகோட்டுதல் வீரர்கள் பயிற்சி பெறும் நகரகவா சர்வதேச ரெகாட்டா மைதானம், அவர்கள் தங்கியுள்ள கப்பலில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. டேபிள் டென்னிஸ் வீரர்களும் தங்களது பயிற்சியைத் தொடர சுமார் 30 கி.மீ. பயணம் செய்ய வேண்டியுள்ளது.

200 மரக் குடியிருப்பு

சுமார் 200 கண்டெய்னர் போன்ற மரக் குடியிருப்புகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,000 வீரர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால், சாப்ட்பால், ஜியு-ஜிட்சு மற்றும் குராஷ் உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்காக இந்தக் குடியிருப்புகள் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here