விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணைப்பு பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று காலையில் ஆய்வு செய்து, பொது மக்களிடம் பேருந்துகள் இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 3,297 பேருந்துகளுடன், 2,915 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 6,212 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இவற்றில் 2,48,270 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, திங்கள்கிழமை (14-ம் தேதி) வழக்கமாக இயக்கப்படும் 1,099 பேருந்துகளுடன், 2,240 சிறப்பு பேருந்துகள் என 3,339 பேருந்துகள் இயக்கப்பட்டன.
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்த டிக்கெட்கள் தானாக ரத்தாவது இல்லை. முன்பதிவு செய்தவர்கள் தான் ரத்து செய்ய முடியும், அவர்களின் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளீடு செய்தால் மட்டுமே ரத்து செய்ய முடியும். சிலர் திட்டமிட்டே பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.
ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்தன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.














