இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியதையடுத்து 6 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் 300-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் வான் பரப்பில் பரவியதை அடுத்து, ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உள்ளூர் நேரப்படி காலை 5:30 மணி முதல் தனது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது. இதனால் ஒரே நாளில் சுமார் 22,800 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல், தோகா, கோலாலம்பூர் போன்ற சர்வதேச நகரங்களுக்கான சேவைகளும், பாலி, சுராபாயா உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன. பயணிகள் விமான நிலையங்களில் தங்களின் பணத்தைத் திரும்பப் பெறவும், உடைமைகளை மீட்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து செயற்கைக்கோள் படங்களின் மூலம் இரு பெரிய சாம்பல் மேகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஒரு சாம்பல் மேகம் சுமார் 20,000 அடி (6,100 மீட்டர்) உயரத்துக்கு எழும்பி ஜகார்த்தா, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதித்துள்ளது.மற்றொரு பெரிய சாம்பல் மேகம் சுமார் 50,000 அடி (15,200 மீட்டர்) உயரத்துக்கு மேல் எழும்பி, சுண்டா ஜலசந்தி, இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு மேல் பரவி வருகிறது.















