கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஷிமோகா, குடகு, தலைக்காவிரி, பாகமண்டலா ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி 2,284 அடி முழு கொள்ளளவைக் கொண்ட கபினி அணையின் கொள்ளளவு 2,282 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பை கருதி விநாடிக்கு சுமார் 25,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பதிவாகும் வழக்கமான அளவுக்கு தென்மேற்குப் பருவமழை பெய்யவில்லை. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளுக்கும் போதிய நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டன.
இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. தமிழக அரசு கடந்த 28-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முறையிட்டதை அடுத்து, 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்த மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடிநீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டது. இதை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில் கடந்த சில தினங்களாக கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்தது. காவிரியின் முக்கிய துணை நதியான கபினி உற்பத்தியாகும் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 25,000 கனஅடி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா தர மறுத்த நிலையில் இயற்கையின் கொடையாக மழை பொழிவு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.















