Home தேசிய செய்திகள் கபினியில் நீர் திறப்பு அதிகரிப்பு: விநாடிக்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றம்

கபினியில் நீர் திறப்பு அதிகரிப்பு: விநாடிக்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றம்

0

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ ஷிமோகா, குடகு, தலைக்​கா​விரி, பாகமண்​டலா ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இரவு 8 மணி நிலவரப்படி 2,284 அடி முழு கொள்ளளவைக் கொண்ட கபினி அணையின் கொள்ளளவு 2,282 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பை கருதி விநாடிக்கு சுமார் 25,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பதிவாகும் வழக்​க​மான அளவுக்கு தென்​மேற்​குப் பரு​வ​மழை பெய்​ய​வில்​லை. இதனால் காவிரி ஆற்​றின் குறுக்கே உள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய 4 அணை​களுக்​கும் போதிய நீர்​வரத்து இல்​லாமல் வறண்டு காணப்பட்​டன.

இதனால், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி ஜூன், ஜூலை மாதங்​களில் தமிழகத்​துக்கு திறக்க வேண்​டிய நீரை கர்​நாடக அரசு திறக்​க​வில்​லை. தமிழக அரசு கடந்த 28-ம் தேதி காவிரி ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டத்​தில் முறை​யிட்​டதை அடுத்​து, 15 நாட்​களுக்கு தமிழகத்​துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​விட வேண்​டும் என ஒழுங்​காற்​றுக் குழு உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணை​யத்​தில் கர்​நாடக அரசு மேல்​முறையீடு செய்​தது. கர்​நாட​கா​வின் கோரிக்​கையை நிராகரித்த மேலாண்மை ஆணை​யம், தமிழகத்​துக்கு 15 நாட்​களுக்கு 3,500 கனஅடிநீரை திறந்​து​ விடு​மாறு உத்​தர​விட்​டது. இதை கண்​டித்து கர்​நாட​கா​வில் கன்னட அமைப்​பினர், விவ​சாய அமைப்​பினர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இந்தச் சூழலில் கடந்த சில தினங்களாக கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்தது. காவிரி​யின் முக்​கிய துணை நதி​யான கபினி உற்​பத்​தி​யாகும் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்​களாக கன‌மழை பெய்து வருகிறது. இதனால், கபினி ஆற்றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

இதனால் அணை​யின் பாது​காப்பு கரு​தி, தமிழகத்​துக்கு காவிரி​யில் விநாடிக்கு 25,000 கனஅடி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா தர மறுத்த நிலையில் இயற்கையின் கொடையாக மழை பொழிவு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version