Home தேசிய செய்திகள் பயங்கரவாதத்தை எதிர்ப்பது போல ஏமாற்றுவது பாகிஸ்தானுக்கு புதிதல்ல: வெளியுறவு அமைச்சகம்

பயங்கரவாதத்தை எதிர்ப்பது போல ஏமாற்றுவது பாகிஸ்தானுக்கு புதிதல்ல: வெளியுறவு அமைச்சகம்

0

பயங்கரவாதி மசூத் அசார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கான சன்மானத்தை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக பாகிஸ்தான் அரசு உயர்த்தி இருப்பது கண்துடைப்பு நடவடிக்கை என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுபோல தந்திரமாக ஏமாற்றுவது பாகிஸ்தானுக்கு ஒன்றும் புதிதல்ல என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தானின் இத்தகைய கண் துடைப்பு நடவடிக்கைகளும் மக்களை ஏமாற்றும் செயல்களும் ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

பயங்கரவாதத்துக்கு அரசாங்கமே ஆதரவளிக்கும் ஒரு நாடு இத்தகைய அறிவிப்பை வெளியிடுவது – அதுவும் ஒரு போலி அறிவிப்பை வெளியிடுவது – எவ்வளவு அர்த்தமற்றது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அவர்கள் இதுபோன்று போலி அறிவிப்புகளை வெளியிடாமல், உண்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏனெனில், இந்த அறிவிப்புகளால் எந்த பயனும் இல்லை” என்று தெரிவித்தார்.

உளவுத்துறை வட்டார தகவல்படி, பாகிஸ்தானின் தேசிய புலனாய்வு முகமை, தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகளின் பட்டியலில் மசூத் அசாரை சேர்த்துள்ளது. மேலும், அவர் குறித்து தகவல் அளிப்போருக்கான சன்மானம் ரூ.20 லட்சத்துக்குப் பதிலாக ரூ.70 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக கடந்த 2019ல் ஐநா பாதுகாப்பு சபை அறிவித்தது. அவர் குறித்த தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

எப்ஏடிஎப் அமைப்பின் முழுமையான கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த 2022ல் எப்ஏடிஎப்-ன் சாம்பல் நிற பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. மீண்டும் அந்த பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில், ஐநாவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக காட்ட வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

மசூத் அசார் எங்கே உள்ளார்?

மசூத் அசார் இருக்கும் இடம் குறித்த தகவல் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. அவர் பாகிஸ்தானில் இல்லை என்றும் ஆப்கனிஸ்தானுக்குள் சென்றுவிட்டார் என்றும் கடந்த 2021 முதல் பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால், இதை ஆப்கனிஸ்தான் மறுத்துள்ளது. அதோடு, இந்தியாவும் பாகிஸ்தானின் இந்த கூற்றை மறுத்துள்ளது.

தாக்குதல்கள்: இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மசூத் அசார், 1999 டிசம்பரில் இந்திய காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் இருந்து கந்தஹாருக்கு கடத்தப்பட்ட நிலையில், அதில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களை விடுவிப்பதற்காக அவர் விடுவிக்கப்பட்டார்.

அதற்கு அடுத்த ஆண்டே அவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பு 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதும், 2016ல் பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீதும், 2019ல் புல்வாமாவிலும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version