மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது குறித்து பிவாண்டி நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தரப்பில், “பிவாண்டியில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் நேற்றிவு 11.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் தலா 12 வீடுகள் வீதம் மொத்தம் 48 வீடுகள் இருந்தன.
இந்தக் கட்டிடத்தை பல மாதங்களுக்கு முன்னரே ஆபத்தான வசிப்பிடம் என்று நகராட்சி நிர்வாகம் வரையறுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருந்தும் அதிலிருந்து மக்கள் வெளியேறாமல் சட்டவிரோதமாக மராமத்துப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் கட்டிடத்தில் ஒரு பக்கம் இடிந்துள்ளது. சிலர் வெளியேறிய நிலையில் கட்டிடத்தின் மற்றொரு பகுதியும் இடிந்தது. ஏற்கெனவே பல்வேறு குடும்பங்கள் காலிசெய்துவிட்ட நிலையில் எஞ்சியிருந்தவர்களும் சரியான நேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டதால் பாதிப்பு குறைந்துள்ளது.
கட்டிடத்தில் இருந்து வெளியேறாத மராமத்துப் பணியில் இருந்த தொழிலாளர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணி நடைபெறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர், தானே மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சிறுவன் ஒருவன் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பிவாண்டி நகராட்சி நிர்வாக துணை ஆணையர் அரவிந்த் கோகரே கூறுகையில், “கட்டிடத்தில் விரிசல் விழுவதாகத் தகவல் வந்ததுமே நாங்கள் அங்கே சென்றுவிட்டோம். எங்கள் குழுவினர் வீடுவீடாகச் சென்று எல்லோரையும் வெளியேற்றினர். சில பெண்கள் ஒத்துழைக்கவில்லை. சாப்பிட்டு வருகிறோம் என்றனர்.
கட்டிடத்தில் சட்டவிரோதமாக மராமத்துப் பணிகள் நடந்துவந்தன. குடியிருப்புவாசிகள் எல்லோரையும் ஒருவழியாக வெளியேற்றிய நிலையில் வேலையாட்கள் வரவில்லை. நாங்கள் மக்களை வெளியேற்றி கட்டிடத்திலிருந்து வெளிவந்த சில நிமிடங்களில் மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்தது” என்றார்.















