தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல் துறையினரின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த 20-ம் தேதி மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல், அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, காவல் துறை சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில், நீதிபதி சுமதி முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. பாளையங்கோட்டை சிறையில் இருந்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, மார்க்கண்டேயனிடம் போலீஸார் ஏற்கெனவே போதுமான அளவுக்கு விசாரணை நடத்திவிட்டனர், எனவே, போலீஸ் காவல் தேவையில்லை என எம்எல்ஏ தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதேபோல் முதல்வர் குறித்து மிகக் கடுமையாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியிருப்பதால் அவருக்கு ஜமீன் தரக்கூடாது என காவல் துறை தரப்பில் வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, மார்க்கண்டேயன் எம்எல்ஏவின் ஜாமீன் மனு மற்றும் போலீஸ் காவல் கோரிய காவல் துறையினரின் மனு ஆகிய 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, மார்க்கண்டேயன் மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான திமுகவினர் கூடியிருந்தனர். அங்கிருந்த தனது ஆதரவாளர்களை மார்க்கண்டேயன் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “எவ்வளவு நாள் நான் சிறையில் இருக்கிறேனோ, அவ்வளவு வேகத்தில் நாம் ஆட்சிக்கு வருவோம். மேலும் சிறையில் நன்றாக இருக்கிறேன். அங்கு 25-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அதனை படித்து வருகிறேன். என்னைப் பார்க்க யாரும் வர வேண்டாம்” என்று கூறினார்.
இதனிடையே, பாளையங்கோட்டை சிறைக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுகவினர் திரண்டு வந்து, மார்க்கண்டேயன் எம்எல்ஏவை சந்தித்து பேசினர்.















