விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், மோக் ஷா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘கட்டா குஸ்தி 2’.
செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. கடந்த 3ம் தேதி வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் விஷ்ணு விஷால் பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றி எனக்கு மிகவும் சிறப்பானது. முதலில் ஐசரி கே.கணேஷுக்கு நன்றி. ஒரு தயாரிப்பாளராக அவர் என்மீது முழு நம்பிக்கை வைத்து சுதந்திரம் தந்தார்.
அந்த நம்பிக்கையே இந்த வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. சினிமா என்பது ஒரு குழு முயற்சி. இதில் பணியாற்றிய ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கியதால்தான் இன்று குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக இது மாறியுள்ளது.
இயக்குநர் செல்லா அய்யாவுடன் எனக்கு 11 ஆண்டுகளாக நட்பு உள்ளது. அவர் மீது எப்போதும் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. நல்ல குடும்பப் படங்களைத் தொடர்ந்து வழங்கும் திறமை அவருக்கு இருக்கிறது.
எதிர்காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி வணிக இயக்குநர்களில் ஒருவராக அவர் உயர்வார். இன்றைய ரசிகர்கள் விழிப்புணர்வுடன் படங்களை ரசிக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு படத்தையும் மிகுந்த பொறுப்புடன் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.















