முதல்வர் விஜய் இன்று கரூர் வருகை: 10 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ செல்கிறார்

0
19

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் வருகிறார். அப்போது 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ செல்கிறார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் தனியார் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், கருணை அடிப்படையில் 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்குகிறார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் இன்று கரூர் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் கரூர் செல்கிறார்.

கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் பிற்பகல் 12.15 மணிக்கு நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றுப் பேசுகிறார். அங்கிருந்து 1.15 மணிக்கு புறப்பட்டு திருக்காம்புலியூர், கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா,லைட் ஹவுஸ் முனை, திருமாநிலையூர், தாந்தோணிமலை, காளியப்பனூர் வழியாக சுற்றுலாமாளிகை வரை 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோவாக சென்று மக்களை சந்திக்கிறார். இதற்காக சாலையின் இருபுறமும் இரும்புதடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்திய பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, மணவாசியில் ரூ.1,700 கோடியில் அமையும் தனியார் காலணி தொழிற்சாலைக்கு (எவர்வென் கோத்தாரிபுட்வேர் பிரைவேட் லிமிடெட்)அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்குகிறார்.

பின்னர், மாலை 4.10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம்மாலை 6 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இரவு 7 மணியளவில் சென்னை சென்றடைகிறார்.

ஏற்பாடுகள் தீவிரம்: கரூர் வெண்ணெய்மலை தனியார் அரங்க வளாகத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டைபெற்றுள்ள 5 ஆயிரம் பேருக்குமட்டுமே அனுமதி வழங்கப்பட் டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் என்.ஆனந்த்,விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். இதைத்தொடர்ந்து முதல்வரின் தனி பாதுகாப்புப் பிரிவு டிஐஜி தர்மராஜா, காவல்துறை அதிகாரிகளுடன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 6,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர,தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு வைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் வெண்ணெய்மலை பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் கல்லூரி ஆகியவற்றுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here