“வயநாடு நிலச்சரிவுக்கு சுரங்கப் பணிகளே காரணம்” – உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு

0
16

கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலச்சரிவுக்கு அங்கு நடைபெற்ற சுரங்கப்பாதை பணிகளே காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின் (அனக்கம் பொயில் – கல்லாடி – மேப்பாடி) நுழைவாயில் அருகே, இன்று (ஜூலை 7) பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலத்துக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நிலச்சரிவு நடந்ததுமே அப்பகுதியில் இருந்து ஒருவர் சடலமாகவும், 7 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் இருவர் உயிரிழந்ததால் பலி இப்போது 3 ஆக அதிகரித்துள்ளது.

நிலச்சரிவு நடந்த சுரங்கப்பாதை திட்டப் பணியாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அருகே இந்த மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக, இந்த நிலச்சரிவு குறித்து தகவல் வெளியிட்ட கேரள முதல்வர் வி.டி.சதீசன், “மீட்புப் பணிகளைத் தாமதமின்றி ஒருங்கிணைக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை அமைச்சர் ஏ.பி.அனில் குமார் மற்றும் வேளாண் துறை அமைச்சர் டி.சித்திக் ஆகியோரை உடனடியாக வயநாட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளேன். மாவட்ட ஆட்சியருடனும் நான் தொலைபேசியில் பேசினேன்” என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் வயநாடு, கோழிக்கோடு பகுதிகளுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

‘மனிதத் தவறால் ஏற்பட்ட நிலச்சரிவு’

இந்தச் சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் டி. சித்திக், “இது இயற்கையாக நிகழ்ந்த நிலச்சரிவு அல்ல; மனிதத் தவறால் ஏற்பட்ட நிலச்சரிவு. இது நிர்வாக அலட்சியத்தால் நிகழ்ந்த ஒரு தெளிவான சம்பவம். கல்லாடியில் நிலச்சரிவு நடந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கொங்கன் ரயில்வேக்கு எழுத்துபூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

வயநாடு மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த மொத்தம் 60 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் நேரில் உள்ளார். நானும் மாநில அமைச்சர் ஏ.பி. அனில் குமாரும் சம்பவ இடத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம். இது குறித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொங்கன் ரயில்வேக்கு முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்தது, ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுபோன்ற விஷயங்களைச் சகித்துக்கொள்ள முடியாது; ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்தனர்” என்று கேரள அமைச்சர் டி. சித்திக் கூறினார்.

நிலச்சரிவு ஏற்பட்டபோது சம்பவ இடத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஹம்சா மந்திகரா என்ற உள்ளூர்வாசி கூறுகையில், “நான் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன். திடீரென பெரும் கூச்சல் கேட்டதை அடுத்து திரும்பிப் பார்த்தேன். முதலில், மண் அலை கீழ்நோக்கி வருவதைப் பார்த்தேன். பின்னர், திடீரென மலையே சரிந்து வேகமாக கீழ் நோக்கி வந்தது. நான் உடனடியாக அங்கிருந்து ஓடி தப்பித்தேன். சிறிது நேரத்துக்கெல்லாம் நான் நின்றுகொண்டிருந்த பேருந்து நிறுத்த கட்டிடம் மண்ணில் புதைந்து மறைந்துவிட்டது.

இந்த திட்டம் குறித்து நாங்கள் பலமுறை எங்கள் கவலைகளைத் தெரிவித்தோம். சுரங்கத்துக்காக தோண்டப்பட்ட மண், அருகில் உள்ள 40 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டதில் அதுவே ஒரு மலைபோல் ஆகிவிட்டது. தொடர்ந்து மழை பெய்தால் அது பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் அஞ்சினோம். ஆனால், எங்கள் எச்சரிக்கை கண்டுகொள்ளப்படவேயில்லை. இந்த நிலச்சரிவு இயற்கையானது அல்ல. இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

ஜபிர் ஷா என்ற மற்றொரு உள்ளூர்வாசி கூறுகையில், “நிலச்சரிவு ஏற்பட்டபோது கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் ஒருசிலர்தான் இருந்தனர். பாதிப்பு குறைவாக இருப்பதற்கு அதுதான் காரணம். இந்த நிலச்சரிவில் பேருந்து நிழற்குடை, அருகில் இருந்த மசூதி ஆகியவை மண்ணால் மூடப்பட்டுவிட்டன. தற்போது மண்ணை அகற்றும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இதில், இருவர் உயிரோடு மீட்கப்பட்டனர்.

கட்டுமான நிறுவனம் முதலில் 15 பணியாளர்களைக் காணவில்லை என கூறியது. அதன் பிறகு அந்த எண்ணிக்கையை 10 என தெரிவித்துள்ளது. மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் டிப்பர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனினும், பணிகள் மெதுவாகவே நடக்கின்றன. சுரங்கப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் அது அதிக ஆபத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டுமான நிறுவனம் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here