வெனிசுலா நிலநடுக்கம் உணர்த்தும் முக்கியப் பாடம்

0
19

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் ஏறக்குறைய 1,500 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவுக்கு ஒரு முக்கியமான பாடமும் உணர்த்தப்பட்டிருக்கிறது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஜூன் 24 அன்று மாலை சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. 7.1 ரிக்டர் அளவு கொண்ட முதல் நிலநடுக்கம், தலைநகர் கராகாஸிலிருந்து மேற்கே 168 கிலோமீட்டர் தொலைவில், 22 கிலோமீட்டர் ஆழத்தில் உண்டானது.

ஒரு நிமிடத்துக்குப் பிறகு, 7.5 ரிக்டர் அளவு கொண்ட இரண்டாவது நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதில் கராகாஸ், அரகுவா, கராபோபோ உள்ளிட்ட மாநிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்துவிழுந்த நிலையில், இதுவரை 1,500 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கானோர் சிக்கியதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது அசாதாரணமானது. எனவே, இந்தச் சேதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரிக்டர் அளவு ஒரு முக்கியக் காரணி என்றாலும், ஒரே ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் அதிக ஆழத்திலும், குறைந்த ஆழத்திலும் ஏற்படும்போது அவற்றின் பாதிப்புகளின் அளவு வேறுபடும்.

குறைவான ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிக அளவில் சேதத்துக்கு உள்ளாகின்றன. ஆழமற்ற நிலநடுக்கங்களால் அந்தப் பகுதியில் சக்திவாய்ந்த நில அலைகள் உருவாகி மேற்பரப்பில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஈரமான, அதிக வலுவில்லாத நிலப்பரப்புகளில் நில அதிர்வின் தாக்கம் பல மடங்கு அதிகரிக்கும் என்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தவிர, வெனிசுலாவில் எண்ணெய் வளம் இருந்தாலும் அவற்றின் மீதான சர்வதேசத் தடைகள், பெருமளவிலான ஊழல் போன்றவற்றின் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது.

இதனால், கட்டுமானங்களை உருவாக்குவதிலும் அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பதிலும் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை; இதன் காரணமாக நிலநடுக்கத்தின்போது பல கட்டிடங்கள் முற்றிலும் சேதம் அடைந்திருக்கின்றன. இந்தக் காரணிகளை இந்தியா பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம்.

நிலநடுக்கத்தைத் துல்லியமாக முன்கூட்டியே கணிப்பது இதுவரை சாத்தியம் ஆகவில்லை என்றாலும், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் பகுதிகளில் கட்டிடங்களின் உறுதித்தன்மை முதல் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தப்படுவதன் மூலம் பாதிப்புகளை இயன்றவரை குறைக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நிலநடுக்கம் நிகழ அதிகச் சாத்தியம் கொண்ட மண்டலம் 5இல் அமைந்திருக்கும் இமயமலை, வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற பகுதிகளிலும், மண்டலம் 4 இல் அமைந்திருக்கும் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஜூன் 27 அன்று ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்தியாவின் ஜம்மு, டெல்லி-என்சிஆர், பஞ்சாப் போன்ற பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டது கவனிக்கத்தக்கது. ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், அதை அனைத்து வகையிலும் எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இந்தியா இருக்க வேண்டும்.

கட்டிட விதிமுறைகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதை அவ்வப்போது நிகழும் கட்டிட விபத்துகள், தீவிபத்துகள் போன்றவை உணர்த்துகின்றன. இந்தச் சூழலில், வெனிசுலா நிலநடுக்கத்தின் சேதங்களை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here