வெனிசுலாவில் அடுத்தடுத்து பூகம்பம்: நிலைகுலைந்த நகரங்கள் – அவசரநிலை அறிவிப்பு

0
14

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் மிகப் பெரிய இரட்டை நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதில் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளன. 

வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி) 39 விநாடிகள் இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்வுகளால் கரீபியன் தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

அதிகாரபூர்வ உயிரிழப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இந்த இயற்கைப் பேரிடரால் 10,000 முதல் 1 லட்சம் வரை உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.

தலைநகர் கராகஸ் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்ததால், ஒட்டுமொத்த நகரமும் தூசு மண்டலமாக மாறியுள்ளது.

வீதிகளில் மக்கள் அலறியடித்தபடி ஓடியதாகவும், இடிபாடுகளுக்குள் தங்களின் உறவினர்களை தேடி மக்கள் தவிப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நகரின் முக்கிய பகுதிகளில் மீட்பு குழுவினர், தன்னார்வலர்களுடன் இணைந்து இடிபாடுகளை அகற்றி உயிருக்குப் போராடுபவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தின் வீரியத்தால், வெனிசுலாவின் மிக முக்கிய சர்வதேச நுழைவாயிலாக திகழும் சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் பலத்த சேதமடைந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியான லா குவைராவில் உள்ள விடுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் தரைமட்டமாகியுள்ளன. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 4.9 முதல் 6.4 ரிக்டர் அளவிலான 20-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சமடைந்து வீதிகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here