வீர தீரச் செயலுக்காக இந்திய அரசின் ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரத்தை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.48 லட்சத்துக்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம், இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2024 டிச.19-ம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற அதிரடி தாக்குதலின்போது, தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவரது முகம், தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனினும், தனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தையும் பொருட்படுத்தாமல், கடமை உணர்வுடன் தொடர்ந்து களத்தில் போராடி தீவிரவாதிகளை வீழ்த்தினார்.
அவரது வீர தீரச் செயலைப் பாராட்டி, இந்தியாவின் 2-வது உயரிய அமைதிக்கால வீர விருதான ‘கீர்த்தி சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த ஜூன் 8-ம் தேதி நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். மீனாட்சி சுந்தரத்தின் நாட்டுப்பற்றும், துணிச்சலும் தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்ததுடன், இளம் தலைமுறையினரிடம் வீர உணர்வு, தேசப் பற்றைவளர்க்கும் விதமாக அமைந்து பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில், ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை நேற்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.48 லட்சத்துக்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.
ராணுவ வீரரின் குழந் தையை மடியில் வைத்துக் கொஞ்சிய முதல்வர்.
இந்த சந்திப்பின் போது, அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் கலந்துரையாடினார். மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை கையில் வாங்கி, முதல்வர் இருக்கையில் அமர்ந்தவாறே தனது மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் படைவீரர் நலத் துறை அமைச்சர் சரத்குமார், தலைமைச் செயலர் சாய்குமார், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முன்னாள் படைவீரர் நலத் துறை இயக்குநர் சுந்தரவல்லி, இணை இயக்குநர் மேஜர் எம்.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.















