“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்; ஆனால் திமுக எங்கள் மீது பழிபோடுகிறது” – நாராயணசாமி

0
18

“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு சாதாரண தொண்டன் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாகியிருக்கிறது. திமுக எங்கள் மீது பழிப்போடுகிறது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று (ஜூன் 4) இரவு பழநிக்கு வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு பழநி அடிவாரத்தில் இருந்து வின்ச் ரயிலில் மலைக்கோயிலுக்கு சென்றார். அவரை கோயில் அதிகாரிகள் வரவேற்றனர்.

விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டு, ஆண்டிக் கோலத்தில் தண்டாயுத பாணியை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், வின்ச் ரயில் மூலம் அடிவாரத்துக்கு வந்த அவர், தேவஸ்தான தங்கும் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ”ஊடகங்களில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வரும் என்று கருத்து கணிப்பு வெளியிட்ட சமயத்தில் தமிழகத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த மாற்றம் மிகத் தெளிவாக தமிழக மக்கள் ஒரு மாற்று அரசியலை விரும்புகிறார்கள், மாற்று நிர்வாகத்தை விரும்புகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

2026 தேர்தலில மிகப்பெரிய அரசியல் கட்சிகளுக்கும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளுக்கும் மிகப்பெரிய பாடம். ஒரு சாதாரண தொண்டன் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாகியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இண்டியா கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைத்த 5 ஆண்டுகள் தமிழத்தில் வளர்ச்சித் திட்டங்களை ஸ்டாலின் கொடுத்தார். அதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். ஆகவே, முதல்வர் விஜய் தலைமையில் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி எங்களை முதுகில் குத்திவிட்டது. எங்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி மீதும், காங்கிரஸ் தலைவர்கள் மீதும் திமுகவினர் பழியை சுமத்துகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் கட்சி அவருக்கு மெஜாரிட்டி பலம் இல்லாத சமயத்தில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து 5 ஆண்டுகள் அவர் ஆட்சி நடத்தினார் என்பதை திமுக மறந்துவிட்டது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டு, திமுக தனியாக தேர்தலை சந்தித்ததையும் அவர்கள் மறந்துவிட முடியாது. கூட்டணியில் மாற்றங்கள் வரும். பல கட்சிகள் இணையும், பல கட்சிகள் பிரிந்து போகும். அதற்காக ஒரு அரசியல் கட்சியை, திமுக மற்றும் அதனுடைய தலைவர்கள் விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்களுடைய தீர்ப்பை அந்த அரசியல் கட்சிகள் எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, எங்களுடைய புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற சூழ்நிலை உருவாகி, மக்கள் எங்களுக்கு வாக்களிக்க தயாராக இருந்தனர். மக்கள் எங்களுடைய ஆட்சியை விரும்பினார்கள். என்.ஆர்.காங் – பாஜக ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக திமுக, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, நாங்கள் புதுச்சேரியில் ஆட்சியை இழந்தோம். மாநில அளவிலான கூட்டணி வேறு, அகில இந்திய அளவிலான கூட்டணி வேறு. மாநில அளவில் மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை முன் வைத்து கூட்டணி சேருகிறோம். அகில இந்திய அளவில் நாட்டு நலன் கருதி, நாட்டு மக்களுடைய நலனைக் கருத்திலே கொண்டு கூட்டணி அமைக்கப்படுகிறது.

இண்டியா கூட்டணி பலமாக இருந்தால்தான் இந்த மத வாத, பிரிவினை வாத, மக்கள் விரோத, ஜனநாயகத்திற்கு எதிரான, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மிதிக்கின்ற மோடி அரசை நாம் வீழ்த்த முடியும். இதை திமுக கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தனியாக நின்று போராடினால் வெற்றி பெற முடியாது. இண்டியா கூட்டணியோடு சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். ஆகவே, அவர்கள் தங்களுடைய கோரிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஊழல் செய்ய மாட்டேன். எனக்கு ஊழல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என முதல்வர் விஜய் தனது முதல்வர் உரையிலேயே தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் எண்ணமாக உள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் ஆட்சி மீது திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டுகள் வைக்கின்றன. தமிழகத்தில் குற்றங்கள் நிகழ்கின்றன. அவர் தற்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளார். அதனால் பொறுத்திருப்போம்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட விருப்பம், முடிவு. அவர் பல காரணங்களுக்காக அந்த முடிவை எடுத்திருக்கலாம். இன்று நண்பகல் 12 மணிக்கு தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். அவர் அறிவித்த பின்னரே அதைப் பற்றி பேச முடியும்” என்று நாராயணசாமி கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here