பிஹார் மாநிலத்தில் உள்ளூர் சுற்றுலா உள் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது கட்டாயம் என்று அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மாநில அரசின் பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹார் மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்களது சொந்த மாவட்டத்தைத் தவிர்த்து, மாநிலத்தில் உள்ள வேறு ஏதேனும் ஒரு மாவட்டத்திற்குத் தங்களது குடும்பத்தினருடன் இரண்டு நாட்கள் (இரண்டு இரவுகள் உட்பட) சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக வெள்ளி, சனி இரவுகளில் தங்க வேண்டும். இந்த இரண்டு நாள் தங்குதலின் போது, அவர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள குறைந்தபட்சம் மூன்று சுற்றுலாத் தலங்களையாவது நேரில் சென்று பார்வையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிஹாரில் உள்ள இயற்கை கிராமப் புற மற்றும் சூழலியல் சுற்றுலா மையங்களை அரசு ஊழியர்களே முதலில் கண்டறிந்து தங்குவதன் மூலம், அங்குள்ள உள்கட்டமைப்புகள் மேம்படுவதோடு, உள்ளூர் பொருளாதாரமும் வலுவடையும் என்ற நோக்கில் இந்த புதுமையான முயற்சியை அம்மாநில அரசு கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.















