ஈரான் – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது. ஹார்முஸ் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையாலும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தும் இடையூறுகளும் மாதக்கணக்கில் நீடித்து வருவதால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விலக்கு அளித்தாலும், இது நீண்டகாலம் நீடிக்க வாய்ப்பில்லை. எனவே, வளைகுடா நாடுகளில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் வியூகங்களை இந்தியா வகுத்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை இந்திய டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
அங்கு இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் போர்க்கப்பல்கள் இந்திய டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும்போது தேவையான பாதுகாப்பை அளிக்கும்.
இந்த திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்தவுடன் இந்திய டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு செல்லும் என கூறப்படுகிறது. இத்திட்டம் வெற்றி பெற்றால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி எரிவாயுவை கொண்டு வரலாம்.















