சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.) ஒன்றாகும்.
இத்தடத்தில் பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணி முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இப்பணிக்காக மொத்தம் 7 சுரங்கப் பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், சேர்வராயன் என்று பெயரிடப்பட்ட சுரங்கப் பாதை தோண்டும் இயந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான (கீழ் வழித்தடம்) பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியது.
மொத்தம் 824.6 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து, மூலக்கடை மெட்ரோ நிலையத்தை சேர்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக வந்தடைந்தது.
இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஒட்டுமொத்தமாக, 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இதுவரை 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தங்களின் பணிகளை முடித்து இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளன.
இத்திட்டத்தில், மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் மூலக்கடைக்கு இடையேயான சுரங்கப் பாதை பகுதி, பெரும் சவால்கள் நிறைந்த மிகக் கடினமான ஒரு பகுதியாகும்.
இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் பக்கிங்காம் கால்வாய்க்கு அடியிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு அடியிலும், 14 க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைக் கடந்தும் சுரங்கம் அமைக்கும் பணியை முடித்தது.
இதனால், பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் அல்லது தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாத வண்ணம் வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து, இச்சவாலான பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச நில அதிர்வு மற்றும் மாற்றங்களுக்குள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. மேலும், இப்பணி கண்காணிப்புக் கருவிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.















