டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே

0
24

ஐபிஎல் 2026 தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (மே 5) நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது. கே.எல். ராகுல் (12) மற்றும் பதும் நிஸங்கா (19) ஜோடி சொற்ப ரன்களில் வெளியேற, நடுவரிசையில் நிதிஷ் ராணா (15) மற்றும் கருண் நாயர் (13) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த டெல்லி அணியை, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (38) மற்றும் இம்பாக்ட் பிளேயராக வந்த சமீர் ரிஸ்வி ஜோடி மீட்டெடுத்தது. சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்கள் (4 சிக்ஸர்கள்) விளாச, டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (6) ஆரம்பத்திலேயே வெளியேறி ஏமாற்றமளித்தார். இருப்பினும், சஞ்சு சாம்சன் களமிறங்கியது முதலே அதிரடி காட்டி போட்டியை சென்னை பக்கம் திருப்பினார். அவர் 52 பந்துகளில் 87 ரன்கள் (7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய கார்த்திக் சர்மா 31 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தி, பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்தியுள்ளது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here