தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தவெக தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன்படி, நேற்று முன்தினம் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் தொகுதியில் சாலை வலம் (ரோடுஷோ) வந்தார். நந்தனம் சிஐடி நகரிலிருந்து ரோடு ஷோ தொடங்கிய அவர் தொகுதி வேட்பாளர் என்.ஆனந்துடன் பிரச்சார வாகனத்தில் வலம் வந்தார்.
தொடர்ந்து அவர் தி.நகரில் அன்பழகன் மேம்பாலம், வடக்கு உஸ்மான் சாலை, பசுல்லா சாலை வழியாக ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் நுழைந்து வாகனத்தில் நின்றவாறு கையசைத்து பிரச்சாரம் செய்தார்.
அதைத் தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் வழியாக எழும்பூர் தொகுதிக்கு சென்று ரோடு ஷோ நடத்தினார். பின்னர் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வாகனத்தில் சென்றவாறு வாக்கு சேகரித்தார்.
பல ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் நின்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். விஜய் பிரச்சாரத்தை முன்னிட்டு அவர் செல்லும் வழி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
விஜய்க்கு 3 இடங்களில் பேச மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில், அவர் பேசாமல் அனுமதியின்றி (தடையை மீறி) ரோடு ஷோ நடத்தினார்.
இதையடுத்து, அனுமதியின்றி ரோடு ஷோ நடத்திய நடிகர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகளான தி.நகர் தவெக வேட்பாளர் என்.ஆனந்த் மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர் அப்புனு ஆகியோர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் அதிகாரி சந்தோஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிபந்தனைகளை மீறி கூட்டம் கூட்டியது, அனுமதிக்கப்பட்ட நிகழ்வுக்கு பதிலாக ரோடு ஷோ நடத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.














