பிஹார் தலைநகர் பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் அந்த மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பிஹார் முதல்வராக 10-வது முறையாக பதவி வகிக்கிறார். அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 10-ம் தேதி மாநிலங்களவை எம்பியாக அவர் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த சூழலில் ஆளுநர் லெப்டினென்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னனை இன்று மாலை 3.30 மணிக்கு சந்திக்கும் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். அதற்கு முன்பாக இன்று மாலை 2 மணிக்கு பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுகிறது.
இதன்பிறகு பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து எம்எல்ஏக்கள் பங்கேற்கும் கூட்டம் பாட்னாவில் நடைபெற உள்ளது. இதில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார். துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரி முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்வரிசையில் உள்ளார். பாஜக மூத்த தலைவர்கள் சஞ்சீவ் சவுராசியா, ஜானக் ராம், ஸ்ரேயசி சிங், தரம்ஷீலா குப்தா ஆகியோரும் முதல்வர் பதவிக்கு காய்களை நகர்த்தி வருகின்றனர்.
மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணிக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கூறும்போது, ’’அனைத்து எம்எல்ஏக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார்’’ என்று தெரிவித்தார்.
பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், பிஹாரின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், துணை முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பாட்னா செல்கிறார். நாளை நடைபெற உள்ள புதிய அரசு பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.














